காதல் திருமணம் செய்த ஜோடியை கடத்திய பெண் வீட்டார்… கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு.. பெண்ணின் தந்தை உள்பட 9 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 2:51 pm
Quick Share

கரூர் அருகே காதல் திருமணம் செய்த காதலர்களை கடத்திய சம்பத்தில் பெண்ணின் தந்தை உள்பட 9 பேரை கைது செய்த போலீசார், காதல் ஜோடியை பத்திரமாக மீட்டனர்.

கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த ஜல்லிபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்கிற காளியப்பன் (22). பால் வண்டியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்தவர் கோமதி (19). இவர் தனியார் கல்லூரியில் பி.காம். முதலாண்டு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி இருவரும் வீட்டுக்குத் தெரியாமல் சென்று திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் வெள்ளியணை காவல் நிலையத்தில் கடந்த 27ஆம் தேதி தஞ்சமடைந்தனர். இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பெண் வீட்டார் தங்களுக்கும் தங்கள் பெண்ணிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சென்று விட்டனர்.

இதனை அடுத்து திருமணம் செய்து கொண்ட இருவரும் கார்த்திக் குடும்பத்துடன் சென்று விட்டனர். புதுமண தம்பதிகள் இருவரும், மணமகன் கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி என்பவரின் ஏமூர்புதூரிலுள்ள வீட்டில் இருந்தனர். நேற்று நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த போது 2 ஆம்னி வேனில் வந்த கும்பல் கார்த்திக், கோமதி இருவரையும் கடத்திச் சென்று விட்டனர்.

காதல் திருமணம் பிடிக்காத கோமதியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கடத்திச் சென்று விட்டார் என கார்த்திக்கின் உறவினர் வாங்கலாயி வெள்ளியணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் உஷாரான போலீசார் அவர்களின் செல்போன் எண்களின் இருப்பிடத்தை கண்டறிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பாடியில் கோமதியும், ஆர்.வெள்ளோடு பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில், கார்த்திக்கும் வெள்ளியணை போலீசாரால் மீட்கப்பட்டனர்.

காதல் ஜோடியை கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் அப்பா, மாமா, சித்தப்பா உள்ளிட்ட 9 பேரை வெள்ளியணை போலீசார் கைது செய்து அவர்கள் மீது அத்து மீறி வீட்டிற்குள் சென்றது, ஆயுதங்களால் தாக்கியது, சாதிப் பெயரை சொல்லி திட்டியது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 607

0

0