நிலமோசடி கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபரிடம் நிலம் ஒப்படைக்கப்படும் : அமைச்சர் மூர்த்தி உறுதி..!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 4:13 pm
Quick Share

கடந்த 10 ஆண்டில் நில மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபரிடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்று வணிகத் துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவு செய்யும் பணியினை மதுரை ஒத்தக்கடை ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார்.

பின் நிகழ்ச்சி மேடையில் பேசிய அமைச்சர் மூர்த்தி கூறும்போது:- கடந்த ஒரு ஆண்டு காலத்தில் 4 மாதம் கொரோனா தொற்று, 2 மாதம் தேர்தல் மற்றும் 1 மாதம் மழை வெள்ளம் இருந்தது. இருப்பினும் பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித்துறையின் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 87% வருமானம் பத்திரப் பதிவு துறை மூலம் கிடைக்கிறது.

தமிழ் நாட்டின் வருமானத்தை அதிகரிக்கவும், அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயன் பெரும் வகையில் சனிக்கிழமை ஆவணம் பதிவு செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 100 பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும். போலி பத்திர பதிவு கடந்த ஆண்டை விட தற்போது குறைந்துள்ளது.

பத்திரப் பதிவு துறையில் உள்ள குறைகளை கலைய சட்ட முன்வடிவம் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது. இதனால் 100% பத்திரப் பதிவு முறைப்படுத்தப்படும். தமிழகத்தில் அனைத்து பகுதியிலும் சார் பதிவாளர் அலுவலகம் திறக்கப்படவுள்ளது. கடந்த 10 ஆண்டில் நில மோசடி கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபரிடம் நிலம் ஒப்படைக்கப்படும்.

பத்திரப் பதிவு மென் பொருள் (Software) மெதுவாக செயல்படுகிறது என குற்றச்சாட்டு உள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும், எனக் கூறினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மூர்த்தி பேசும்போது:- சனிக்கிழமைகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மாற்று நாட்களில் விடுமுறை வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு துறையில் தக்கல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

60 வயது மேற்ப்பட்ட முதியோர்களுக்கு பத்திரப்பதிவில் முன்னுரிமையும், மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவதற்காக மாடியில் உள்ள அலுவலகங்களுக்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் செயல்படும் 100 கட்டிடங்களில் 50 கட்டிடங்கள் புதிதாக அமைக்கப்பட உள்ளது. ஆவண எழுத்தர்களை தேர்வு முறையில் உருவாக்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பத்திர பதிவு செய்த உடனே பத்திரம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 87% பத்திரப்பதிவு முடிந்த உடன் பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வணிகவரித் துறை 1 லட்சம் கோடியும் பத்திரப் பதிவுத் துறை 13 ஆயிரம் கோடியும் வருமானம் ஈட்டியுள்ளது. பதிவு துறை வருமானம் ஈட்டக்கூடிய துறையாக மாறி உள்ளது.

பத்திரப்பதிவு துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சட்டமுன் வடிவத்தை 10 மாதங்களுக்கு முன்பாக நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதல் அளித்து. தற்போது, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த சட்ட முன் வடிவம் நிறைவேற்றப்பட்டால் முன்மாதிரியாக இருக்கும். தவறு செய்யும் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை கிடைக்கும், என தெரிவித்தார்.

Views: - 661

0

0