வங்க கடலில் நாளை மீண்டும் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி….!!

28 November 2020, 8:42 am
new storm - updatenews360
Quick Share

சென்னை: வங்க கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் கடந்த 21ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான், தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘நிவர்’ புயலாக புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25ம் தேதி நள்ளிரவு கரையை கடந்தது. இந்த புயல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், தமிழகத்தின் வட மாவட்டங்களில் பரவலாக நல்ல மழையை கொடுத்தது. குறிப்பாக அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் 31 செ.மீ. மழை பதிவானது.

chennai metrology - updatenews360

அந்த புயல் நேற்று ஆந்திரா அருகே காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து நிலைக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, நிவர் புயல் வலுவிழந்த நிலையில் தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் நிலவி வந்தது.

தொடர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திராவின் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்பட வடமேற்கு மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. இதன் தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.

இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனை தொடர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 30ம் தேதி மேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வருகிற 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை 34 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் 29 செ.மீ. மழைப்பொழிவுதான் தமிழகத்தில் இதுவரை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0