“ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

18 August 2020, 10:58 am
Quick Share

தமிழகத்தில் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டு, 13 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி “தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும்” என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா குழுமம். 1992-ஆம் ஆண்டு முதன் முதலாக மகாராஷ்டிராவின் ரத்னகிரியில்தான் தாமிர உருக்காலையான ஸ்டெர்லைட் ஆலையை அமைத்தது. ஆனால், நீர், நிலம், காற்று ஆகியவை மாசுபடுவதாக கூறி அங்கு மக்கள் போராட்டம் வெடித்ததால் ஆலை முற்றிலுமாக மூடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த 1994-ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதி வழங்கினார்.

ஆனால், அந்த ஆலை தொடங்கும்போதே இயற்கை நஞ்சாக மாறும் என கூறி சூழலியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசு வழங்கியுள்ள கட்டுப்பாடுகளை பின் பற்றி ஆபத்துகளை தவிர்த்து ஆலை நடத்தப்படும் என வேதாந்தா நிறுவனம் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கு ஆலை அமைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, கடந்த 2013-ஆம் ஆண்டு அந்த ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் மூச்சு திணரல் போன்ற உடல் ஊபாதைகளுக்கு ஆளாகினர். மட்டும் இன்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழக்கவும் செய்தார்.

இதனை தொடர்ந்து அங்கு மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏராளமான பொதுநல வழக்குகள் குவிந்தன. பொதுநலன் வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 2013-ல் பிறப்பித்த உத்தரவின்படி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான ஸ்டெர்லைட்டின் அப்பீல் மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி கொடுத்தது. தேசிய தீர்ப்பாயத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்தாலும் அது தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டது.

2018-ல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுரம் பகுதியில் மீண்டும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தின் 100-வது நாளில் 2018 மே 22-ந் தேதியன்று மாவட்ட ஆட்சியரகம் நோக்கி பேரணியாக பொதுமக்கள் சென்றனர்.

அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் உயிரிழந்தனர். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

அதில், ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுவது இல்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டது. வேதாந்தா குழுமத்திற்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், மாசு ஏற்படுத்த கூடிய ஆலைகளை மூட வேண்டும் என்றால் முதலில் துத்துக்குடி அனல் மின் நிலையத்தைத்தான் மூட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.

அதேபோல், தமிழக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் நீர், நிலம், காற்று ஆகியவை கடுமையாக மாசு படுகிறது என சுற்றுச் சூழல் துறையிடம் உரிய அனுமதி பெற்ற பிறகுதான் ஆலை மூடப்பட்டது உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை முன்வைத்து வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, 815 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஸ்டெர்லைட் ஆலைக்கு தண்ணீர், மின்சாரம் போன்றவற்றை வழங்கோரி தாக்கல் செய்யபட்ட வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நிரந்தரமாக செல்லும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு மக்கள் போராட்டத்திற்கும், இயற்கை நீயதிக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது என சுற்று சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.