மதுரை ஆதீனம் தருமபுரம் ஆதீனத்துக்கு வருகை : தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையம் வழங்கல்..!!

Author: Babu Lakshmanan
27 August 2021, 9:45 am
Quick Share

தருமபுரம் ஆதீனத்துக்கு மதுரை ஆதீனத்திற்கு வந்த தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை தருமபுரம் ஆதீனம் வழங்கினார்.

உடல்நலக்குறைவு காரணமாக காலமான மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதின மடத்தில் தருமபுரம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்நின்று கடந்த 14ஆம் தேதி குரு மூர்த்தம் செய்து வைத்தார்.

அதன் முன்னதாக மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நியமனத்திற்கான ஆச்சார்யா அபிஷேகத்தினை தருமபுரம் ஆதினம் முன்நின்று நடத்திவைத்து தீட்ஷையும் வழங்கினார். 26-ஆம் தேதியான நேற்று இரவு மதுரை ஆதினம் 293-வது மடாதிபதிகள் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு வருகை புரிந்து எழுந்தருளினார்.

அவருக்கு பூரண கும்ப மரியாதை மேளதாளங்கள் முழங்க ஆதீனம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி முதன்முதலாக வருகைதரும் மதுரை ஆதீனத்தின் சிறப்புக் கொலு காட்சி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுர ஆதீன இருபத்தி ஏழாவது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு தருமபுர ஆதீன மடாதிபதி ஆறு கட்டி சுந்தரம் வளையம் என்ற காதணி ஒன்றை வழங்கி பாரம்பரியமான ஆச்சாரிய தீட்சை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், தாய்நாடு தாய்மொழி, பசு, பூமி, பெற்றதாய் ஆகியோரை பேணி பாதுகாக்க வேண்டும், தமிழ்நாட்டில் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து பொதுமக்களுக்கு நல்ல செய்திகளை வழங்கி ஆன்மீக சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான்கள், மற்றும் ஊழியர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்

Views: - 583

0

0