கோலாகலமாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் தெப்பத்திருவிழா : படகு மூலம் போலீசார் தீவிர கண்காணிப்பு!!
28 January 2021, 1:27 pmமதுரை : கோலகலாமாக நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் தெப்பத் திருவிழாவில்- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர்.
உலகபிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத்தில் ஆண்டுதோறும் ஜனவரி தைப்பூச பவுர்ணமியன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தெப்பத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து சுவாமியும் , அம்மனும் தினசரி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் . இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா இன்று நடைபெற்றது .
இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும் , சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயில் வந்தடைந்தனர்.
அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சுவாமியும் அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளியதையடுத்து பக்தர்கள் ஏராளமானோர் வடம் பிடித்து இழுக்க , தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர் .
தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்தனர். மீனாட்சியம்மன் தெப்பதிருவிழாவை நேரில் பார்த்தது மகிழ்ச்சியளிப்பதாகவும், அம்மனின் அருள் பெற்றதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.
0
0