90ஸ் கிட்ஸை திருமணம் செய்து நகைகளுடன் மாயமான இளம்பெண் : விசாரணையில் வேறு ஒருவரின் மனைவி என்பது அம்பலம்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 February 2022, 5:58 pm
Marriage Fraud - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : பழனியில் இளைஞரை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டு தலைமறைவான பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி புறநகர் பகுதியில் அமைந்துள்ளது கணபதிநகர்‌. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர் குருவம்மாள் (வயது 65). கணவரை இழந்து வாழ்ந்துவரும் குருவம்மாளுக்கு பாலமுருகன் (வயது 32) என்ற ஒரு மகன் உள்ளார்.

இவருக்கு திருமணம் செய்து வைக்க பல நாட்களாக பெண் பார்த்து வந்த நிலையில், குருவம்மாளின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மருதாத்தாள் என்ற பெண் திருமண தரகர் வேலை பார்த்து வருகிறார்.

இவரை சந்தித்து தனது மகனுக்கு பெண் இருந்தால் சொல்லுமாறு கூறிய நிலையில், திருமணத்தரகரான மருதாத்தாள் தனது கணவரின் அண்ணன் மகள் ஒருவர் இருப்பதாகவும், அவரதுபெயர் ஸ்ரீமதி என்றும் 28 வயது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பெண்ணின் தாய்‌‌ வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டு ஓடி‌விட்டார். தந்தை வேறொரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார் என்றும், எனவே அந்த பெண்ணை பாலமுருகனுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என குருவம்மாளிடம் மருதாத்தாள் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெண்ணின் தந்தை, அண்ணன் மற்றும் உறவினர்கள் ஆகியோர் சம்மதத்துடன் கடந்த நவம்பர் 15ம்தேதி வீட்டிலேயே வைத்து ஸ்ரீமதிக்கும்- பாலமுருகனுக்கும் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

இதற்காக தரகர் மருதாத்தாளுக்கு 11ஆயிரம் ரூபாய் கமிசன்‌ கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திருமணமான‌ 5நாட்களில் காரைக்குடியில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிய ஸ்ரீமதியை காரைக்குடிக்கு அனுப்பிவைத்த நிலையில் 15நாட்களுக்கும் மேலாக வராததால் குருவம்மாள் காரைக்குடிக்கு நேரில் சென்று பார்த்து ஸ்ரீமதியை மீண்டும் பழனிக்கே அழைத்து வந்தார்.

பழனி வந்த மறுநாளே தனது பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே பரமக்குடியில் உள்ள பாட்டியை பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மீண்டும்‌ வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

அப்போது வீட்டில் இருந்த அரைப்பவுன்‌ தங்கநகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றையும் எடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இந்நிலையில் பரமக்குடி சென்ற ஸ்ரீமதியின் செல்போனிற்கு தொடர்பு கொண்டால் வேறொரு ஆண் பேசியுள்ளார்.

அவரிடம் தனது மருமகள் ஸ்ரீமதி எங்கே என குருவம்மாள் கேட்க, போனில் பேசிய ஸ்ரீமதி தனது மனைவி என்றும், தான் ஸ்ரீமதியின் கணவர் என்றும் தெரிவித்ததால் குருவம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

இதனையடுத்து திருமணம் செய்து வைத்த தரகர் மருதாத்தாளை தொடர்பு கொண்டு கேட்டபோது தனக்கு எதுவும்‌தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு‌ மாதங்களாக ஸ்ரீமதியை தொடர்பு கொள்ளமுடியாததாலும் தரகர் மருதாத்தாளும் எதுவும் பேசாததாலும் இன்று பழனி நகர் காவல்நிலையத்தில் குருவம்மாளும், பாலமுருகனும் புகார் அளித்துள்ளனர்.

அதில் தங்களை திட்டமிட்டு மோசடி செய்த ஸ்ரீமதி மற்றும் தரகர் மருதாத்தாள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், திருமணத்திற்காக செலவு செய்த 60ஆயிரம்ரூபாய் பணம், மற்றும் ஸ்ரீமதிக்கு போட்ட இரண்டு பவுன் தங்க நகை, வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற நகல் மற்றும் பணம் ஆகியவற்றை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த பெண் மற்றும் பெண் தரகர் மீது புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 545

0

0