கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு: கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை…
Author: kavin kumar30 December 2021, 6:09 pm
திருவாரூர்: பொங்கல் பரிசு கரும்பு 1க்கு ரூ 33 அரசு விலை நிர்ணயம் செய்துள்ளபோது கூட்டுறவுத்துறை ரூ15க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்து விவசாயிகள் வயிற்றிலடிப்பதா என மன்னார்குடியில் தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது:- இன்றைக்கு மத்திய அரசாங்கம் நம்மாழ்வாரின் கொள்கையை பின்பற்றி பாரம்பரிய விவசாயம் இயற்கை உரங்களை பயன்படுத்த முன்வரவேண்டும் என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்துள்ளார். அதனை வரவேற்கிறோம். தமிழக அரசாங்கம் நம்மாழ்வார் வழியை பின்பற்றி தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும், உர தயாரிப்பு குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ளவும், தஞ்சாவூரை மையமாக வைத்து அவர் நினைவாக இயற்கை விவசாய ஆராய்ச்சி மையத்தை உருவாக்க வேண்டும்.
கரும்பு ஒன்றுக்கு ரூ 33 அரசு விலை நிர்ணயம் செய்திருக்கிறது. ஆனால் கூட்டுறவுதுறை அலுவலர்கள் கிராமபகுதி விவசாயிகளிடம் கரும்பு ஓன்றுக்கு ரூ 15 ரூபாய் விலை கொடுத்து அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதோடு, மட்டுமின்றி 33 ரூபாய்க்கு விவசாயிகளிடம் ஒப்புதல் பெற முயற்சிக்கிறார்கள். குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மிக மோசமான நிலை தொடர்கிறது. இதனை தடுத்து நிறுத்தி அரசு நேரடியாக வெளிப்படைத் தன்மையோடு ரூ.33க்கு கொள்முதல் செய்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையை நம்பி கடன் பெற்ற விவசாயிகளின் வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும். கூட்டுறவு நகை கடன் தள்ளுபடியில் 3.50 லட்சம் விவசாயிகளுக்கு தகுதியற்றவர்கள் என்று நிராகரிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
திமுக தேர்தல் அறிக்கையில் கடன்பெற முடியாத குடும்பங்களுக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்குவோம் என்பதை அப்போதே நிபந்தனைகளை சொல்லியிருந்தால், நகையை அடகு வைத்து கடன் பெற வேண்டிய நெருக்கடியில் இருந்த விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 4 சதவீத வட்டியில் கடன் பெற்றிருக்க முடியும். ஆனால் தமிழக அரசு திமுக தேர்தல் அறிக்கையை நம்பி விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் கடனை பெற்றனர். தற்போது அவர்கள் தகுதியற்றவர்கள் என கூட்டுறவு வங்கிகள் 13 சதவிகித வட்டி போட்டு வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட நேரிடும். எனவே விவசாயிகள் நலன் கருதி வட்டியை மட்டுமாவது தள்ளுபடி செய்து அசலை பெற்றுக்கொண்டு நகை கடன் பெற்ற விவசாயிகளுக்கு திரும்ப வழங்கிட தமிழக முதலமைச்சர் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0
0