திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? லஞ்ச ஒழிப்புத்துறையை நாடும் அதிமுக… ஷாக்கில் நெல்லை திமுக!

Author: Udayachandran RadhaKrishnan
20 September 2023, 8:48 pm
Nellai Admk - Udpatenews360
Quick Share

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பல லட்சம் முறைகேடு? லஞ்ச ஒழிப்புத்துறையை நாடும் அதிமுக… ஷாக்கில் நெல்லை திமுக!

நெல்லை மாநகராட்சியில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் கே.ஆர்.ராஜூ முன்னிலை வகித்தார்.

நெல்லை மாவட்ட அ.தி.மு.க பகுதி செயலாளர் காந்தி வெங்கடாசலம், இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன் மற்றும் நிர்வாகிகள் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன் ஆகியோர் திரண்டு வந்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்க தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் மூலமாக தினமும் 700 பணியாளர்கள் மற்றும் குப்பை வாகனங்கள், உபகரணங்கள் மூலமாக குப்பைகளை சேகரிக்க வேண்டும். 4 மண்டலங்களிலும் 55 வார்டுகளிலும் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் இதுவரை எந்த வார்டிலும் அந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

ஆனால் அவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு ரூ.86 லட்சம் அந்த தனியார் நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இல்லையெனில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிப்போம்.

பெண் கவுன்சிலர் மனு 12-வது வார்டு கவுன்சிலர் கோகுலவாணி சுரேஷ் அளித்த மனுவில், நெல்லை சந்திப்பு சிந்து பூந்துறை சாலை தெருவில் இருந்து உடையார்பட்டி சாலை தெரு வரை சுமார் 1200 மீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதம் பணிகள் தொடங்கியது.

ஆனால் இதுவரையிலும் 400 மீட்டர் தூரத்துக்கு மட்டுமே பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதியில் சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

தச்சை மண்டலம் 2-வது வார்டு தி.மு.க வட்டச் செயலாளர் சடாமுனி அளித்த மனுவில், தச்சநல்லூர் கரையிருப்பு பசும்பொன் நகர் பகுதியில் சாலை மோசமாக உள்ளது. குடிநீர் வசதியும் முறையாக இல்லை. எனவே இந்த 2 வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நம்பி குமார் அளித்த மனுவில், நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள மார்க்கெட்டில் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதற்கு பழையபடி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரை சூட்ட வேண்டும். மேலும் மார்க்கெட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு மார்பளவு சிலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

Views: - 215

0

0