சீர்காழியில் வாய்க்காலின் கரைகள் உடைப்பு… விளைநிலங்களில் புகுந்த மழைநீர் ; 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 10:12 am
Quick Share

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே முடவன் வடிகால் பிரிவு கரையில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால், விளை நிலங்களில் உட்புகுந்த மழை நீரால் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக தொடர் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சீர்காழியில் அதிகபட்சமாக 22 செ.மீ மழை பதிவானது. திடீர் கனமழையால் சீர்காழி கொள்ளிடம் பூம்புகார் சுற்றுவட்டார பகுதி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் என பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வைத்தீஸ்வரன் கோவில் அருகே முடவன் வடிகால் பிரிவு வாய்க்காலில் இரு இடங்களில் அடுத்தடுத்து உடைப்பு ஏற்பட்டு, மழை நீர் முழுவதுமாக விளைநிலங்களுக்குள் புகுந்து சம்பா பயிர்கள் முற்றிலும் மூழ்கியது. இதனால் வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருவத்தூர் குமாரநத்தம் பணமங்கலம் செங்க மேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி கிராமங்களில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் முற்றிலும் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

முடவன் வடிகால் பிரிவு பத்து ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் மழை வரும் பொழுது, கண்துடைப்புக்காக தூர்வாரும் பொதுப்பணித்துறையினர், வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரப்படாததே விவசாயம் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வடிகால் வாய்க்கால்கள் மற்றும் ஆறுகளை தூர்வாரி சீரமைக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 166

0

0