போலீஸ்காரங்க வந்து கேட்டா நான் என்ன சொல்றது… போலீஸுக்கு பயந்து கள்ளச்சாராயம் விற்பதை நிறுத்த மறுத்த வியாபாரி…

Author: Babu Lakshmanan
8 April 2022, 4:42 pm

மயிலாடுதுறை : சீர்காழி அருகே போலீசாருக்கு பயந்து பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த மறுத்த வியாபாரியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதி மற்றும் சீர்காழியை சுற்றியுள்ள ஓதவந்தான்குடி, திருப்புங்கூர், மாதிரவேலூர், பனங்காட்டான்குடி ஆகிய இடங்களில் புதுச்சேரி மாநில சாராயம் பாண்டி ஐஸ் என்கிற பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கால நேரமின்றி இருபத்தி நான்கு மணி நேரமும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இந்த விஷச் சாராயத்தை ஏழை கூலித் தொழிலாளர்கள் அருந்தி வருகின்றனர். இதனால் சீர்காழி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இதனால் குடும்பத்தின் தலைவரை இழந்து பல குடும்பங்கள் ஆதரவின்றி சோகத்தில் தவித்து வருகின்றனர்.

சீர்காழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாராய விற்பனை செய்பவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வரும் ஆட்களாகவே உள்ளனர். இது போன்ற ஒருசிலரை காவல்துறை கலை எடுத்தாலே இப்பகுதியில் விஷச் சாராயம் விற்பனை குறைவதோடு, பல குடும்பங்களில் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் ஓதவந்தான்குடி கிராமத்தில் சாராயத்தை குடித்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாராய வியாபாரியை சுற்றி வளைத்து சாராய விற்பனையை கைவிட வலியுறுத்தினர்.

சாராய விற்பனையாளர் கலியன், நான் காவல்துறை வரும் போது அவர்களிடம் சொல்லிவிட்டு அதன் பின்னர் நிறுத்துகிறேன் என கூறும் வீடியோவும், தொடர்ந்து வீட்டில் வைத்தே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு சில காவல் துறை அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து சாராய விற்பனையை செய்து வருகின்றனர். ஒருவரை கைது செய்தால் மற்றவர் அதே இடத்தில் விற்பனை செய்வதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. எனவே விஷச் சாராய விற்பனையை அடியோடு நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும் அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?