மேகதாது அணை விவகாரம்… பேச்சுவார்த்தைக்கு கட்டாயப்படுத்தக் கூடாது : மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

14 July 2021, 7:25 pm
Quick Share

சென்னை : மேகதாது அணை விவகாரத்தில் இரு மாநிலங்களையும் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மேகதாது அணை விவகாரம் குறித்து தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் பிரதிநிதிகளும் அமர்ந்து பேச்சு நடத்த வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தில் பேச்சு நடத்த வேண்டும் என்ற கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் கோரிக் கையை தமிழகம் நிராகரித்து விட்ட நிலையில், அவரது குரலை மத்திய அமைச்சர் எதிரொலிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மேகதாது அணை விவகாரம் குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் கூறியுள்ளனர். இவை அனைத்தும் கர்நாடகத்திற்கு ஆதரவான குரல்கள் தான். மேகதாது அணை உட்பட காவிரி சிக்கல் தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தக்கூடாது என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் இரு மாநில உரிமைகளை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பேச்சு நடத்தும்படி கட்டாயப்படுத்தக்கூடாது.

மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதி மன்றமும், காவிரி நடுவர் மன்றமும் அளித்த தீர்ப்புகளையும், 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தையும் செயல்படுத்தும் அமைப்பாகவே மத்திய அரசு இருக்க வேண்டும். மாறாக, மேகதாது விவகாரத்தில், தமிழகத்தை பாதிக்கும் வகையில் கர்நாடகத்திற்கு மறைமுகமாக ஆதரவளிக்கும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது, என தெரிவித்துள்ளார்.

Views: - 121

0

0