உயிரிழந்த மூதாட்டிக்கு 2வது டோஸ் தடுப்பூசி…குறுஞ்செய்தியால் குடும்பத்தினர் குழப்பம்: சுகாதாரத்துறை ஊழியர்களின் அலட்சியம் காரணமா?

Author: Rajesh
1 February 2022, 4:44 pm
Quick Share

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 98 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 83 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடும் பணிகளும் நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோவின் இணையதளம் பக்கத்திற்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் கோவை மாநகராட்சி தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி கொண்டார். தடுப்பூசி செலுத்திய சில நாட்களில் அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார்.

இந்நிலையில். சமீபத்தில் மூதாட்டி ஏற்கனவே அளித்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட மாநகராட்சி ஊழியர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி வந்துவிட்டதாகவும், உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது, மூதாட்டி இறந்து விட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி இறந்த 67 வயது மூதாட்டிக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியை தெலுங்குபாளையம் நகர்புற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் செலுத்தியதாக அவர் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், கோவின் இணையதளத்தில் மூதாட்டி இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் மூதாட்டியின் உறவினர்கள் மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1783

0

0