66வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!!
25 September 2020, 1:42 pmநீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக சேலத்தில் உள்ள மேட்டூர் அணை 66வது முறையாக நிரம்பியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது.இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருந்து வருகிறது. அதாவது கடந்த 21-ந் தேதி காலை 89 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இரவு 89.92 அடியாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மேலும் 3 அடி உயர்ந்து 96.87 அடியாக உள்ளது.
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 99.62 அடியாகவும், நீர்இருப்பு 64.34 டிஎம்சியாகவும் இருந்தது. இந்நிலையில் பிற்பகலில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதனால் 66வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.