கந்துவட்டிக்காரர்களாக மாறிய மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள் : ஆபாசமாக பேசுவதாக ஆட்சியரிடம் பெண்கள் மனு.!!
13 August 2020, 10:11 amகோவை : கந்துவட்டிக்காரர்கள் போல தங்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து, தவராக பேசும் மைக்ரோ பைனான்ஸ் ஊழியர்கள், தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் வெள்ளலூர் மற்றும் வரைட்டி ஹால் ரோடு பகுதியில் வசித்து வரும் பெண்கள், கோவை சவுரிபாளையம் ராஜீவ் காந்தி நகரில் செயல்பட்டு வரும் அரைஸ் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வரைட்டி ஹால் ரோடு, பகுதியில் இரண்டு குழுக்களாக 50 பேர் நபர் ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் 52 வார தவணையாக கடன் பெற்றுள்ளனர்.
இரண்டு குழுக்களாக பிரித்து கடனை வழங்கிய நிறுவனமானது தற்பொழுது ஒன்றாவது குழுவில் உள்ள நாங்கள் அனைவரும் முழுமையாக கடனை வட்டியுடன் செலுத்தி விட்டோம் எனவும் இந்த நிலையில் இரண்டாவது குழுவினர் சரியாக கடனை செலுத்தவில்லை என இரண்டு ஆண்டுகள் கழித்தும் லோன் நிலுவையில் உள்ளது என்று கூறியுள்ளனர்.
மேலும் அவர்கள் குடியிருக்கும் ஹவுசிங் யூனிட் அடுக்குமாடி குடியிருப்புக்கு நிறுவனத்தின் பணியாளர்கள் குமார் சதீஷ் மற்றும் பிரபு ஆகியோர் அதிகாலை 6 மணிக்கே வீட்டுக்கு வருவதாகவும் பணம் கொடுத்தால் தான் இங்கிருந்து கிளம்புவோம் என கந்துவட்டிக்காரர்கள் போல அடாவடித்தனம் செய்வதாகவும் பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் கணவரையும் உங்களது நாமினிகளையும் சிறைக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டுவதாகவும் தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு பேசியுள்ளனர்.
கணவர் இல்லாத தருணத்தில் வீடுகளில் இருக்கும் பெண்களிடம் ஜாதி ரீதியான ஆபாசமான வார்த்தைகளை பேசுவதாகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களை இழிவு படுத்துவதாகும் மேலும் எங்களது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து எங்களை தவறான நோக்கத்தில் அவர்கள் அது செல்போனில் படம் பிடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜாதி ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் எங்களை அசிங்கப்படுத்தி வரும் இந்த ஊழியர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்கள் குழுவாக கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.