ஒவ்வொரு நாளும் மகளிர் தின வாழ்த்துகள் கூறுவேன் – அமைச்சர் விளக்கம்

8 March 2021, 10:03 pm
Minister Jayakumar - Updatenews360
Quick Share

பெண்களுக்கு ஒவ்வொரு நாளும் மகளிர் தின வாழ்த்துகள் கூறுவேன் என்று அமைச்சர் அளித்த விளக்கம் வருமாறு

அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம்.

கருவறை தொடங்கி, கல்லறை வரையிலும் ஆணினத்தின் அணுவாய் அடையாளமாய் இருப்பது பெண்கள். எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா என்றான் பாரதி. ஆம் திரும்பிய திசையெங்கும் பெண்கள் இல்லையேல் ஆண்கள் யார் என்பதே இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். அந்த வகையில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் வரிகளை வாழ்நாளில் வாழ்க்கையாய் மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி இதயதெய்வம் நம் அம்மா.

சமூகநீதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், அதிகாரம், ஆட்சி பீடம் என அடித்தட்டு முதல் அத்தனை பெண்களையும் தோல்வி பள்ளத்தாக்கில் இருந்து கைத்தூக்கி, வெற்றி சமவெளியின் வீதிக்கு அழைத்து வந்தவர் நம் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா. இன்று உலகமே பெண்ணினத்தை பார்த்து வியந்து நிற்பதற்கும், அண்ணாந்து பார்ப்பதற்கும், அதிசயமாய் கொண்டாடுவதற்கும் காரணம் ஒற்றை பெண்மணி நம் அம்மா.

அடுப்பங்கரை தொடங்கி ஆட்சி பீடம் வரையிலும் எல்லா இடங்களிலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் ஓய்வின்றி உழைத்துக் கொண்டிருக்கும் தாய்க்குலங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்களையும் மனம் நிறைந்த மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமல்ல மகளிர் தின வாழ்த்து எல்லா நாட்களும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னுடைய வாழ்த்து நிச்சயம் உண்டு. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

Views: - 1

0

0