உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது.. சுற்றியுள்ள தடுப்புகளை அகற்றுங்கள் : சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அதிரடி உத்தரவு!!

22 July 2021, 6:51 pm
register office - updatenews360
Quick Share

சென்னை : சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடைகளில் இனி அமரக் கூடாது என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ திரு. பி. மூர்த்தி அவர்கள்‌ சமீப காலமாகச்‌ சார்பதிவாளர்‌ அலுவலகங்களில்‌ திடீர்‌ ஆய்வுகள்‌ மேற்கொண்டு பல சீர்திருத்தங்களை நடைமுறைபடுத்தி வருகிறார்‌. பதிவுத்துறைச்‌ செயலர்‌ மற்றும்‌ பதிவுத்துறைத்‌ தலைவருடன்‌ கோயம்புத்தூர்‌ மற்றும்‌ சேலம்‌ மண்டலங்களில்‌ மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ சென்ற வாரம்‌ திடீர்‌ ஆய்வுகள்‌ மேற்கொண்டபோது பதிவு அலுவலர்கள்‌ தங்களது அலுவலகத்தில்‌ உயர்ந்த மேடையில்‌ அமர்ந்து பதிவுப்‌ பணி செய்து வருவதால், பொதுமக்களை மரியாதையுடன்‌ நடத்தி அவர்களுக்கு பதிவுச்‌ சேவையினை வழங்குவது சிரமமாக உள்ளது கண்டறியப்பட்டது.

எனவே, இனிவரும்‌ காலங்களில்‌ பதிவு அலுவலர்கள்‌ உயர்ந்த மேடையில்‌ அமராமல்‌ சரிசமமாக அமர்ந்து பதிவுப்‌ பணியினைச்‌ செய்ய வேண்டும்‌ என மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌. சார்பதிவாளர்‌ அலுவலகங்களில்‌ அனைத்து சேவைகளும்‌ கணினி மயமாக்கப்பட்ட நிலையிலும்‌ அரசுக்குச்‌ செலுத்தும்‌ கட்டணங்கள்‌ யாவும்‌ இணைய வழியாகவே செலுத்தப்படுவதால்‌ சார்பதிவாளர்கள்‌ பணத்தைக்‌ கையாள வேண்டிய அவசியமில்லாத நிலையிலும்‌ இந்த உயர்மேடைகள்‌ தற்போது தேவையில்லை என்பதால்‌ பதிவு அலுவலர்களின்‌ இருக்கையினைச்‌ சமதளத்தில்‌ அமைத்து சுற்றியுள்ள தடுப்புகள்‌ உடனடியாகநீக்கப்பட வேண்டும்‌ என மாண்புமிகு அமைச்சர்‌ அவர்கள்‌ உத்தரவிட்டுள்ளார்கள்‌.

இதனைத்‌ தொடர்ந்து, பொதுமக்களுக்கு வெளிப்படையான சேவையினை உறுதிசெய்யும்‌ வகையில்‌ சார்பதிவாளர்கள்‌ தாங்கள்‌ அமர்ந்துள்ள மேடையினைச்‌ சுற்றியுள்ள தடுப்பினை உடனடியாக அகற்றி தங்கள்‌ இருக்கையினைச்‌ சமதளத்தில்‌ அமைக்க வேண்டும்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 126

0

0

Leave a Reply