கனிவாக இருக்கும் CM ஸ்டாலின் தேவைப்பட்டால் இரும்பாகவும் இருப்பார்.. RSS அணிவகுப்புக்கு தடை விதிப்பு குறித்து அமைச்சர் விளக்கம்!!

Author: Babu Lakshmanan
29 September 2022, 2:28 pm
Quick Share

சட்டம் ஒழுங்கை காக்க முதலமைச்சர் ஸ்டாலின் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 471 திருக்கோவில்களில் கையடக்க கணினி மூலம் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூசைகளுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது :- வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப திருக்கோயில்களில் அர்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பணம் செலுத்த கையடக்க கணினி வாயிலாக டிஜிட்டல் பண பரிவர்த்தன முறை முதற்கட்டமாக சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் 471 திருக்கோயில்களில் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் இந்த திட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

100 திருக்கோவில்களில் இந்தாண்டு புனரமைக்க திட்டமிட்டுள்ளோம். இதுவரை 300 திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது. சிறப்பு தரிசனத்திற்கு என தனி வழிமுறைகள் உள்ள நிலையில், பக்தர்கள் அதனை முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். கோவில்களில் கையூட்டு பெற்று கொண்டு சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் ஒழுங்கு காக்க வேண்டும் என முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்நிலையில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்காத வகையில் நல்ல முடிவை அறிவிப்பார். திராவிட மாடல் என்பதை தினம் தினம் நிருபித்து வருகிறோம். கலகத்தை உண்டாக்குவது, பிரச்சனை ஏற்படுத்துவதும், மதம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்துவதும் திராவிட மாடல் அல்ல. பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க முதலமைச்சர் கனிவாகவும் இருப்பார். இரும்பாகவும் இருப்பார், என ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.

Views: - 388

1

0