கரூர் நெடுஞ்சாலைத்துறை ஊழல் விவகாரம்: கேள்வி எழுப்பிய அறப்போர் இயக்கம் மீது ரூ.5 கோடி மானநஷ்ட நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Author: Rajesh
29 April 2022, 10:28 pm
Quick Share

கரூரில் சாலை அமைப்பதில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக கேள்வி எழுப்பியதற்கு ரூ.5 கோடி மானநஷ்ட வக்கீல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் போக்குவரத்து அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு: கரூரில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக, 172 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டது. இதில், 130 கோடி ரூபாய்க்கான பணி ஒதுக்கீடு உத்தரவு, ‘சங்கரானந்த் இன்ப்ரா’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

இதன் உரிமையாளர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்.சாலை அமைக்க தேவையில்லாத இடங்களுக்கும், அமைச்சர் மற்றும் அவரது சகோதரர் துாண்டுதலில், பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் நல்ல நிலையில் உள்ளன; அவற்றை சீரமைக்க தேவையில்லை.கரூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பெரும்பாலான டெண்டர், சங்கரானந்த்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பணி ஒதுக்கீடு உத்தரவு பெற்றபின், பல இடங்களில் எந்த பணியும் மேற்கொள்வது இல்லை. ஆனால், பணி முடித்ததாக போலி ஆவணங்கள் தயாரித்து, பணத்தை பெற்றுக் கொள்கின்றனர். கரூர் மாவட்டம், ஈசநத்தம் முதல், வீரியப்பட்டி, மண்மங்கலம், நன்னியூர்புதூர், புகளூர் சர்க்கரை ஆலை, சேலம் பைபாஸ் சாலை உட்பட பல்வேறு சாலைகள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்டுள்ளன. அங்கு, புதிதாகச் சாலைகள் அமைக்கு பணியோ அல்லது சீரமைக்கும் பணியோ தற்போது வரை மேற்கொள்ளப்படவில்லை. அப்படியிருக்கையில், அதிகாரிகள் உதவியுடன் போடாத சாலைக்கு, 10 கோடி ரூபாய் அளவில் பில் எழுதி பணம் எடுக்கப்பட்டுள்ளது என புகாரளிக்கப்பட்டது.

இதுகுறித்து, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கரூரில் நெடுஞ்சாலைத்துறையில் சாலை போடாமல் ஒப்பந்ததாரருக்கு பணம் கொடுத்ததில் கோடிக்கணக்கில் நடந்த ஊழல் மற்றும் பிந்தைய நடவடிக்கைகயில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் செந்தில் பாலாஜிக்கு தொடர்பு உள்ளதா என்பது விசாரிக்கப்படுமா என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி இருந்தது.

இதனையடுத்து, தற்போது, அமைச்சருக்கு எதிராக கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ரூ.5 கோடி மானநஷ்ட வக்கீல் நோட்டீல் அனுப்பியுள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், அறப்போர் இதனை சட்டரீதியாக சந்திக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

Views: - 326

0

0