சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்புடுற ஆளா இருந்தால்….: அண்ணாமலையை மீண்டும் சீண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 2:11 pm
Senthil Balaji Ask Annamalai-Updatenews360
Quick Share

கோவை : சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடும் ஆளாக இருந்தால் 4 சதவீத கமிஷன் குறித்த ஆதாரத்தை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக சாடியுள்ளார்

கோவை மாவட்டத்தின் வளர்ச்சி திட்டங்களை கண்காணிக்கும் பொறுப்பு அமைச்சராக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பை ஏற்றபின் செந்தில் பாலாஜி இன்று முதல் முறையாக கோவை வந்தார். பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவை மாவட்டத்தை பொறுத்த வரை 8,905 மின்மாற்றிகள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தில் தற்போது 203 கோடி ரூபாய் வரையில் மின்வாரியம் சார்பில் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்பு கொடுப்பது சாதனை. மின்வாரியத்தில் புதிய நடைமுறைகள் இல்லை. ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளே பின்பற்றபடுகின்றது.

மின்வாரிய கடன்சுமை 1.59 லட்சமாக உள்ளது. வருடத்திற்கு 15 ஆயிரம் கோடி வட்டி மட்டுமே செலுத்தும் நிலை இருக்கின்றது. இதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்தோம். அப்போது மின் செலவில் 50 சதவிகிதம் மின்சாரம் கொள்முதல் செய்ய செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி 2500 மெகாவாட்டாக இருக்கின்றது. இடைவெளியை குறைக்க சூரிய மின்சக்தி, கேஸ் மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்தவும், ஏற்கனவே திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு செயல்படுத்தாமல் வைத்திருக்கும் திட்டங்கள் செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

மின் துறையில் 4 சதவீத கமிஷன் வாங்குவதாக, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இந்த அரிச்சுவடிகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. பெரியாரின் வாசகத்துடன் இந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றேன்.

நல்லமனிதராக, சாப்பாட்டுக்கு உப்பு போட்டு சாப்பிடும் ஆளாக இருந்தால் அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும். ஆதாரம் இல்லாமல் இருப்பை காட்ட அவர் பேசுகின்றார்.

மின்வாரியத்தில் 1.46 லட்சம் பணியிடங்களில் 56 ஆயிரம் பணியிடம் காலியாக இருக்கின்றது.
மின்வாரியத்திற்கு இருக்கும் கடனிற்கு 13 சதவீதம் வரை வட்டி கட்டி வருகின்றோம். செலவீனங்களை குறைக்கவும் வெளிப்படை தன்மையுடன் இந்த அரசு செயலபட்டு வருகின்றது. புதிய பணிநியமனங்கள் வரும் போது இந்த பிரச்னைகள் முதல்வர் கவனத்திற்கு எடுத்து செல்லப்படும்.

டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மது விற்றவர்கள் 134 பேர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஆட்சி பொறுப்பேற்று 5 மாத காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

தேர்தலின் போது முதல்வர் 505 வாக்குறுதிகள் கொடுத்தார்.அதில் 202 வாக்குறுதகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவையில் சூயஸ் குடிநீர் திட்டம் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கிறோம். உண்மை நிலையினை முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 363

0

0