கோவையில் நடமாடும் ரேஷன் கடைகள் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்!!
23 September 2020, 4:46 pmகோவை : கோவையில் நடமாடும் நியாய விலை கடைகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு நுகர் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கொரோனா காலத்தில் பொதுமக்களின் வீட்டிலேயே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் வண்ணம் அம்மா நகரும் நியாய விலை கடை என்ற புதிய திட்டத்தை கடந்த 21ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
ரூபாய் 9 கோடியே 66 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி, கோவை மாவட்டத்திற்கு 33 நகரும் நியாய விலைக் கடைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை கோவையில் இன்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கிவைத்தார்.
தொண்டாமுத்தூர் பகுதியில் அம்மா நகரும் நியாய விலை கடை வாகனத்தை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் “தமிழக அரசு நோய்த்தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவே அம்மா நியாய விலை கடை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களின் வீட்டிலேயே இருந்து நியாயவிலைக் கடைகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்குமோ அனைத்தையும் இந்த வாகனத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்