சிறையில் இருந்து கொண்டே மோசடி செய்த பலே கில்லாடி!!

3 September 2020, 3:41 pm
Tirupur Fraud - Updatenews360
Quick Share

திருப்பூர் : ரூ.2.10 கோடி ரூபாய் 2000 ரூபாய் பொம்மை நோட்டுகளை கொடுத்து டிரான்ஸ்போர்ட் அதிபரிடம் ஆவண கட்டணமாக 10 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள எண்டியூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 28). இவர் தனது தந்தை விநாயகம் நடத்தி வந்த டிரான்ஸ்போர்ட் தொழிலை கவனித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக தொழிலில் ஏற்பட்ட முடக்கத்தால் சிரமப்பட்டு வந்தவர், தொழில் வளர்ச்சிக்காக தனது நண்பரான ரியல் எஸ்டேட் நடத்தி வரும் ஜாகிர் உசேனிடம் பத்திரத்தின் பெயரில் 3 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார்.

இதையடுத்து ஜாகிர் உசேன் விசாரித்ததில் கோவையைச் சேர்ந்த ஹரீஸ் ஆச்சார்யா என்பவர் கோடிக்கணக்கில் கடன் கொடுப்பதாக செய்தித்தாள்களில் விளம்பரம் கண்டதாக கூறியுள்ளார். விளம்பரத்தில் வந்த செல்போன் எண்ணிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி ஜாகிர் உசேன் தொடர்புகொண்டபோது கோவையைச் சேர்ந்த ஹரிஷ் ஆச்சார்யா பேசியுள்ளார்.

அப்போது ஆவணம் வாயிலாக கோடி கணக்கில் கடன் தொகை தருவதாக கூறியுள்ளார். மேலும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உரிய ஆவணங்களின் நகல்களுடன் கோவையில் நேரில் சந்திக்குமாறு கூறியுள்ளார.

இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி கோவை அருகே உள்ள சரவணம்பட்டியில் உள்ள ஆர்யாஸ் ஹோட்டலில் வைத்து ஹரிஸ் ஆச்சார்யாவை ஜாகிர் உசேன் உடன் பிரபாகரன் மற்றும் நண்பர்கள் சந்தித்து ஆவணங்களின் நகல்களை வழங்கியுள்ளனர். நகல்களை சரிபார்த்து கடன் பெறுவதற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் கூறுவதாக சொல்லிவிட்டு ஆச்சார்யா சென்றுள்ளார்.

மீண்டும் ஆகஸ்ட் 12ம் தேதி ஜாகிர் உசேனை தொடர்புகொண்ட ஹரிஷ் ஆச்சார்யா, வாட்ஸ்அப் மூலமாக ஐந்து 100 ரூபாய் முத்திரைத் தாள்கள், 5 காசோலைகள், 6 போட்டோக்கள் மற்றும் ஆவண கட்டணமாக 9 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயும் கொண்டுவரும் படி நிபந்தனைகளை அனுப்பியுள்ளார்.

மேலும், கடனுக்கான ஒப்பந்த பத்திரம் தயார் செய்து விட்டதாகவும், ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாகவும், ஆகஸ்ட் 17ஆம் தேதி கோவைக்கு நேரில் வருமாறும் ஹரிஷ் ஆச்சார்யா கூறியுள்ளார்.

பிரபாகரன் ஜாகிர் உசேன் மற்றும் நண்பர்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி அவிநாசியில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ஆனந்த பவன் ஹோட்டலில் வைத்து ஹரிஷ் ஆச்சாரியாவை சந்தித்துள்ளனர்.

தொகை பூர்த்தி செய்யப்பட்ட காசோலைகளும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக் கொண்ட ஹரிஷ் ஆச்சார்யா ஹோட்டல் கார் பார்க்கிங் – ல் இருந்த தனது காரின் டிக்கியை திறந்து அதில் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 105 இரண்டாயிரம் ரூபாய் கட்டுகளாக 2 கோடியே 10 லட்சம் ரூபாய் இருப்பதாக காட்டி, இதை கொண்டு செல்லுமாறும் மீதமுள்ள தொகையை திண்டிவனத்தில் பத்திரப்பதிவு நடக்கும்போது கொடுத்து அப்போது இந்த பணங்களை எண்ணி சரிபார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறி, அந்த பெட்டிக்கு நம்பர் லாக் போட்டு கொடுத்துள்ளார்.

திண்டிவனம் சென்றதும் தனக்கு போன் செய்யச் சொல்லியும் சொல்லியுள்ளார். இதையடுத்து சொந்த ஊருக்கு திரும்பிய பிரபாகரன் மற்றும் நண்பர்கள் ஹரிஷ் ஆச்சாரியாவை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த பிரபாகரன் மற்றும் நண்பர்கள் பெட்டியைத் திறந்து பார்த்தபோது 2000 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் பொம்மை நோட்டுகள் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 29ஆம் தேதி இதேபோன்று அவிநாசி பகுதியில் சென்னையைச் சேர்ந்த ட்ரான்ஸ்போர்ட் அதிபர் மனைவி ஜெனிபர் என்பவரிடம் இதே ஹரிஷ் ஆச்சாரியா பொம்மை ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஆவணக் கட்டணமாக 4 லட்சம் ரூபாய் வசூலித்து மோசடி செய்த செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்த பிரபாகரன், இன்று அவிநாசி காவல் நிலையத்தில் தான் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக புகார் அளித்து 2 கோடியே 10 லட்சம் பொம்மை ரூபாய் நோட்டுகளையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ஏற்கனவே சென்னை டிரான்ஸ்போர்ட் அதிபரின் மனைவி ஜெனிபர் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவிநாசி போலீசார் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு கோவையைச் சேர்ந்த மோசடி ஆசாமி ஹரிஷ் ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் நிலையில், பிரபாகரனை மோசடி செய்தது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோசடி ஆசாமி ஹரிஷ் ஆச்சாரியா இதே போன்று பொம்மை ரூபாய் நோட்டுகளை கொடுத்து தமிழகத்தில் பல பேரிடம் மோசடி செய்திருப்பதாக தெரியவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Views: - 9

0

0