மேட்டூர் அணை திறந்து 55 நாட்களுக்கு மேலாகியும் கடைமடைக்கு வராத தண்ணீர்: சீர்காழி விவசாயிகள் கவலை..!!

Author: Aarthi Sivakumar
13 August 2021, 2:12 pm
Quick Share

மயிலாடுதுறை: மேட்டூர் அணை திறந்து 55 நாட்களுக்கு மேல் ஆகியும் கடைமடை கடைசி பகுதியான சீர்காழி பகுதிக்கு பாசனத்திற்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை கடைசி பகுதியான சீர்காழி தாலுக்காவில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகின்றது. மழை, நிலத்தடி நீர் மற்றும் மேட்டூர் அணை நீரை நம்பியே இந்த பகுதி விவசாயிகள் சுமார் 80 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா, குருவை சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூர் அணை நீரை நம்பி சீர்காழி தாலுக்காவில் உள்ள கடைமடை கிராமங்களான எடமணல், ஆமப்பள்ளம், வேட்டங்குடி, ஆலலசுந்திரம், நல்லூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இந்த பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நேரடி நெல் விதைப்பையும் விவசாயிகள் செய்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து 55 நாட்களுக்கு மேல் ஆகியும் இதுவரை சீர்காழி தாலுக்காவில் உள்ள பிரதான வாய்க்கால்களான ராஜன், புது மண்ணி, பொறை வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் தண்ணீர் வராததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நீரை நம்பி நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி, கடன் வாங்கிய பணத்தை கொண்டு நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து பயிர்கள் வளர தண்ணீர் அவசியமான நேரத்தில் வாய்க்கால்கள் தண்ணீர் இன்றி வறண்டு போயுள்ளதால் விவசாயிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் ஜூலை 10ம் தேதிக்குள் கடைமடை பகுதிகளுக்கு வந்துவிடும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்ட நீர் இதுவரையில் வந்து சேரவில்லை. சென்ற ஆண்டு கொள்ளிடம் ஒன்றியத்தில் பெய்த கனமழையால் சாகுபடி இழப்பு ஏற்பட்டும், தொடர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டும் விவசாயிகள் இருந்து வரும் சூழ்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை நீரை நம்பி கையில் உள்ள பணத்தை செலவு செய்து நெல் விதைப்பில் அவர்கள் ஈடுபட்டனர்.

தண்ணீர் வராததால் மிகப் பெரிய நஷ்டம் ஏற்படும் சூழல் உள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூலம் தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 220

0

0