3வது குழந்தையும் பெண்: ஒருவார கைக்குழந்தையை தாயே அடித்துக் கொன்ற கொடூரம்!!

18 July 2021, 1:25 pm
Infant Murder - Updatenews360
Quick Share

நாமக்கல் : பிறந்து ஒருவாரமே ஆன பெண் குழந்தையை தலையில் அடித்துக் கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து வீடு திரும்பிய பின் ஏப்ரல் 12ஆம் தேதி உடல்நலம் குன்றி குழந்தை உயிரிழந்ததாக கூறி உடலை உறவினர்கள் சுடுகாட்டில் புதைத்தனர்.

சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஒருவாரத்தில் உயிரிழந்ததால் சந்தேகமடைந்த சுகாதாரத்துறையினர் எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை செய்ய முடிவு செய்த காவல்துறையினர் ஏப்ரல் 14ஆம் தேதி குழந்தையின் உடல் தோண்டி எடுத்து உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

இதையடுத்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து மூன்று மாதத்திற்குப் பிறகு வந்த ஆய்வறிக்கையில், குழந்தை தலையில் அடிபட்டு உயிரிழந்தது உறுதியானது.

இதனால் சந்தேகம் வலுத்ததால் போலீசார் நடத்திய விசாரணையில் மூன்றாவதும் பெண்ணாக பிறந்ததால் குழந்தையின் தலையில் அடித்துக் கொன்றதாக தாய் கஸ்தூரி ஒப்புக்கொண்டார். அவரை எருமப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர்.

Views: - 207

0

0