8 மாதத்திற்கு பிறகு இயக்கப்பட்ட மலை ரயில் : ஆனால் பயணிகளுக்கு அல்ல !!

28 November 2020, 8:15 pm
coonoor Rail - Updatenews360
Quick Share

நீலகிரி : எட்டு மாதத்திற்குப் பிறகு படப்பிடிப்பிற்காக குன்னூர் மலை ரயில் இயக்கப்பட்டது .

நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் நீலகிரி மலை ரயில் முக்கிய இடம் பெறுகிறது. இதில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மலை ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த, 8 மாதங்களாக சுற்றுலா பயணிகள் இன்றி நீலகிரி மலை ரயில் இயக்கப்படாமல் இருந்தது.

இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த நிலையில் அவுட் ஆப் லவ் சீசன் 2ம் பாகம் என்கிற இந்தி வெப் தொடருக்கான படப்பிடிப்பு இன்று கேத்தி ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

ஒரு நாள் படப்பிடிப்புக்கு மலை ரயிலை பயன்படுத்த முன்வைப்பு தொகையுடன் 5 லட்சம் ரூபாய் சென்னை ரயில்வே நிர்வாகத்தில் செலுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மலை ரயில் இயக்கி, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் பல மாதங்களுக்கு பிறகு, படப்பிடிப்பு நடத்தப்பட்டதால் இதனை நம்பியுள்ள 300 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பயனடைந்துள்ளனர்.