மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அமைச்சர் ஆறுதல்.!

10 August 2020, 3:11 pm
Minister Visit - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 22 பேர் குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜூ நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்த 49 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதிநகரைச் சேர்ந்த 22 பேர் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 5 பேர் என தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

5 நாளாக இன்று மீட்கும் பணிகள் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் மீட்கப்பட்ட 26 உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. நேற்று மீட்கப்பட்ட 17 உடல்களும் நேற்றிரவு ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.தொடர்ந்து உடல்கள் எடுக்கப்பட்டு வருவதால் கயத்தார் பாரதி நகர் பகுதி சோகத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை உயிரிழந்த உறவினர்கள் புகைப்படத்தை வைத்து அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ கயத்தார் பாரதி நகருக்கு சென்று உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். மக்களின் கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மக்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மக்களுடன் இருக்கும் தேவையான உதவிகளை செய்யும் என்றார்.

அமைச்சருடன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து உயிரிழந்த 6 குடும்பங்களுக்கு அமைச்சர் கடம்பூர் செ ராஜு தனது சொந்த நிதியில் இருந்து தலா 50 ஆயிர ரூபாய் மற்றும் 8 பேருக்கு உறவினர்கள் உடலை பார்க்க செல்வதற்கு உதவியாக தலா ரூ 25 ஆயிர ரூபாய் என 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

தொடர்ந்து தலையால்நடந்தான்குளத்தில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்திற்கும் அமைச்சர் கடம்பூர் செ ராஜு ஆறுதல் கூறினார். இதையடுத்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு நமக்கு அளித்த பேட்டியில் நிலச்சரிவு உயிரிழப்பு மிகுந்த வேதனையான விஷயம், தமிழக முதல்வர், கேரளா முதல்வரை தொடர்பு கொண்டு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் உதவி செய்ய தயார் என்று தெரிவித்துள்ளார்.

மழையின் காரணமாக பணிகளில் சுணக்கம் இருந்தாலும் மீட்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. உயிரிழந்த கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்த குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறியுள்ளேன். தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்து உள்ளேன். மக்களும் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தமிழகத்தில் குடியிருக்க நிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக முதல்வரிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் பார்ப்பதற்கு இ.பாஸ் மற்றும் வாகன வசதி செய்து தரப்படும் என்றார்

Views: - 7

0

0