கோவை குண்டுவெடிப்பு தினத்தில் பேருந்து நிலையம் அருகே கிடந்த மர்மபெட்டி: பீதியில் உறைந்த மக்கள்…வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

Author: Rajesh
14 February 2022, 1:36 pm

கோவை: கோவை குண்டுவெடிப்பு தினமான இன்று காந்திபுரம் பகுதியில் கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் ஊனமடைந்தனர்.

இன்று கோவை குண்டுவெடிப்பு தினம் என்பதால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மாநகர பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே காந்திபுரம் பகுதியில் உள்ள காட்டூர் காவல் நிலையத்தின் எதிரே கருப்பு நிறத்தில் மர்ம பெட்டி ஒன்று கிடப்பதாக அவ்வழியே சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்த காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர் மேலும் இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். பரபரப்பான நேரத்தில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தியதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதனிடையே வெடிகுண்டு நிபுணர்கள் அந்தப் பெட்டியை சோதித்து பார்த்ததில் அந்த பெட்டி காலியாக இருப்பது தெரியவந்தது.

இதை அறிந்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கோவை குண்டுவெடிப்பு தினத்தில் காந்திபுரம் பகுதியில் கிடந்த மர்ம பெட்டியால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!