‘அப்பாவுடன் மூட்டை தூக்கி சம்பாரித்த பணம்’ : நூதன முறையில் பணத்தை இழந்த கல்லூரி மாணவன்..!

15 August 2020, 12:17 pm
Namakkal student - updatenews360
Quick Share

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தின் ராமசாமி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி தனியார் கல்லூரி ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இவரது மகன் மனோஜ் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், மத்திய அரசின் வல்லபாய் படேலின் கல்வி உதவித் தொகைக்காக விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, கல்வி உதவித் தொகைக்காக, உங்களின் விபரம் தேவைப்படுவதாகக் கூறி, மனோஜின் சுய விபரங்களை சேகரித்துள்ளார். அப்போது, ஏ.டி.எம்.மின் பாஸ்வேர்டை அந்த நபர் கேட்டுள்ளார். இதற்கு, உதவித் தொகை விவகாரம் என்பதால், அவரும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, மனோஜின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.23 ஆயிரத்தை நூதன முறையில் கொள்ளையடித்துள்ளனர்.

ரூ.23 ஆயிரம் தனது வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி, தனது செல்போனுக்கு வந்த நிலையில், தனக்கு வந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார் மனோஜ். அப்போது, அவரை அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு, அழைப்பை துண்டித்துள்ளார்.

இதனால், மன வேதனையடைந்த மாணவன் மனோஜ், இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.

“கல்வி உதவித் தொகை என்பதால் ஏ.டி.எம். எண்ணை கொடுத்தேன். எனது படிப்பிற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக நானும், எனது தந்தையும் கடந்த 3 மாதங்களாக மூட்டை தூக்கி சம்பாரித்த பணம் பறிபோகிவிட்டது. இப்போது, கல்வி கட்டணம் செலுத்தாத முடியாத் நிலை ஏற்பட்டுள்ளது,” என கண்ணீர் மல்க மனோஜ் கூறினார்.

Views: - 72

0

0