சத்துணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்… பதறியடித்து வந்த பெற்றோர்கள்.. அரசுப் பள்ளியைக் கண்டித்து சாலை மறியல்..!!
Author: Babu Lakshmanan24 ஜூன் 2023, 12:43 மணி
நாமக்கல் அருகே சத்துணவு சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அருகே நடுப்பட்டி ஊராட்சி உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளியில் சுமார் 190க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் பள்ளியில் முட்டையுடன் சாதம், சாம்பார் வழங்கப்பட்டது. மாலை 3:20 மணிக்கு சத்துணவு சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டது. ஆம்புலன்சில் அறமத்தம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் வெகு நேரம் ஆகியும் குழந்தைகள் வீட்டுக்கு வராத நிலையில், பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று பார்க்கையில், தங்கள் குழந்தை சத்துணவு சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளோம் என்று அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜாமணி மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதைக்கேட்ட பெற்றோர்கள் பதறி அடித்து மருத்துவமனைக்கு சென்று தங்கள் குழந்தைகளை பார்த்துவிட்டு, பின்னர் பெற்றோர்கள் தங்களுக்கு தகவல் தெரிவிக்காததை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அப்பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெண்ணந்தூர் காவல்துறையினர், அவர்களை சமாதானப்படுத்தினர். மேலும், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என்று கூறி ராசிபுரத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் சாலையில் 200க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நாமக்கல் ஏடிஎஸ்பி ராஜி , மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை எடுத்து சாலை மறியலில் கைவிட்டனர். இரவு 7:30 வரை சாலை மறியல் நடந்ததால் அவ்வழியாக போக்குவரத்து செல்ல முடியாமல் பள்ளி கல்லூரி பேருந்துகள் பல மணி நேரம் காத்திருந்து சென்றனர்.
0
0