30% வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும்… இல்லையேல், மே 1 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
18 April 2022, 8:11 pm
Quick Share

டிப்பர் லாரி வாடகையை 30 சதவீதம் உயர்த்தி தர அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், மே 1ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை எண்ணூர் காட்டுபள்ளி சுற்றுவட்டார லாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையார்கள் சங்க தலைவர் சரவணன் தலைமையில் மாதவரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் சங்கச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- டீசல் விலை உயர்வு, வாகன உதிரிபாக விலை உயர்வு போன்ற காரணங்களால் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தொழில் செய்ய முடியாமல் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏற்றப்பட்ட வாடகை, கடந்த இரண்டு ஆண்டுகளாக வாடகை உயர்த்தப்படவில்லை.

நிலக்கரி, பெட்ரோல், டீசல் போன்றவை விலை உயர்வு அதிகரித்த நிலையில் தங்களுக்கான வாடகை கட்டணம் 400 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. 30 சதவீதமாக வாடகையை உயர்த்தி வழங்க வேண்டும். லாரிகள் மூலம் ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் இரும்பு உருக்கு ஆலை, செங்கல் சூளை, தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது.

தங்களது வாடகை கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்திகிறோம். அரசு தலையிட்டு வரும் 1-ஆம் தேதிக்குள் வாடகை உயர்விற்கு உரிய தீர்வு காண வேண்டும். தவறும் பட்சத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம். இதனால் நிலக்கரி கொண்டு செல்லும் பணிகள் பாதிப்பு ஏற்படாமல், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்

Views: - 589

0

0