இருமொழி கொள்கைக்காக போராடும் திமுக தலைவர்களின் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையா..? எச்.ராஜா கேள்வி..!

3 August 2020, 1:01 pm
H. Raja 01 updatenews360
Quick Share

சென்னை : இருமொழி கொள்கையை வலியுறுத்தும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் மட்டும் மும்மொழிக்கொள்கை கடைபிடிப்பது ஏன்..? என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன..? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தமிழகத்தில் இருமொழிக்கல்வி கொள்கையை மட்டுமே தொடரும் என முதலமைச்சர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும், புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழி கல்வி கொள்கை வேதனையும், வருத்தத்தையும் அளிப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இருமொழிக் கொள்கைகளை வலியுறுத்தி வரும் திமுக உள்பட திராவிட இயக்கங்களுக்கு பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, இருமொழி கொள்கையை வலியுறுத்தும் திமுக தலைவர்கள் நடத்தும் பள்ளியில் மட்டும் மும்மொழிக்கொள்கை கடைபிடிப்பது ஏன்..? என அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் இன்று வரை தமிழே படிக்காமல் நம் குழந்தைகள் வளர்வதற்கு தேசிய கல்விக் கொள்கை முற்றுப்புள்ளி வைக்கிறது. இதை எதிர்ப்பது தமிழ் விரோதம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய திராவிட மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அதைப் படிப்பதை எதிர்ப்பது திராவிட விரோதம்.

இது 1960கள் அல்ல. ஏற்கனவே திமுக முன்னனி தலைவர்கள் நடத்தும் மும்மொழி பள்ளிகள் பட்டியல் வெளியிட்டுள்ளேன். மேலும் தமிழகம் முழுவதும் திராவிட இயக்க தலைவர்களது பிள்ளைகள் படிக்கும் பள்ளிகள் பட்டியல் எடுக்கும்படி தேசிய சிந்தனையாளர்களிடம் கேட்டுள்ளேன். இவர்களின் இரட்டை வேடம் கிழிக்கப்படும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.