திருப்பூர் மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் : சனி, ஞாயிறுகளில் கூடுதல் கட்டுப்பாடு!!

Author: Udayachandran
5 August 2021, 9:42 am
Tirupur New Rules- Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் , கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இன்று முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள் , காய்கறிக்கடைகள் , அடுமனைகள் ( பேக்கரி ) உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% இருக்கைகளுடன் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி என்றும் , மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து சூப்பர் மார்கெட் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுவதாகவும் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம் , தாராபுரம் , உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குறிப்பிட்ட வணிக பகுதிகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் பால் , மருந்தகம் , மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் மற்றும் உணவு பொருட்கள் , இறைச்சி , கோழி , மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இயங்க முழுமையாக தடைவிதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் , கேரள தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மேற்படி சோதனைச் சாவடி வழியாக திருப்பூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT – PCR சோதனை சான்றில் கொரோனா இல்லை ( Negativc ) சான்று அல்லது கொரோனா தடுப்பூசிகள் இரண்டு தவணைகள் செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் .

இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே RT – PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து மதுபானக்கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி மட்டுமே செயல்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Views: - 381

0

0