யானை மீது எரியும் டயர் வீசியதால் துடிதுடித்து பலி : மனிதர்களிடம் வெளிப்பட்ட மிருகத்தனம்.. அதிர்ச்சி வீடியோ
22 January 2021, 5:41 pmநீலகிரி: மசினகுடியில் காட்டு யானை மீது எரியும் டயர் வீசிய அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது ஆண் யானை முதுகில் காயத்துடன் சுற்றி வந்தது. இந்த யானைக்கு வனத்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளித்தனர்.
ஓரளவு குணமடைந்த யானை மசினகுடி மக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடியது. இதனால் பொது மக்களுக்கு, ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் யானையைப் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. விஜய், வசீம், கிரி, கிருஷ்ணா ஆகிய முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் காயத்துடன் சுற்றித் திரிந்த யானையை வனத்துறையினர் சிங்காரா வனப்பகுதியில் சுற்றி வளைத்தனர்.
முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஸ்குமார் துப்பாக்கி மூலம் யானைக்கு மயக்க மருந்து செலுத்தினார். யானை லேசாக மயக்கம் அடைந்தவுடன் கும்கி யானைகள் அருகே வந்த போது, காட்டு யானை தனது தும்பிக்கையை நீட்டி கொஞ்சியது. பின்னர் சிறிது நேரத்தில் யானை திடீரென கிழே விழுந்தது.
இதனால் பதறிப்போன வனத்துறையினர் நீரை யானையின் மீது ஊற்றி, உஷ்ணத்தை குறைத்தனர். பின்னர் மயக்கம் தெளிய மருந்து கொடுத்ததும், யானை லேசாக எழ முற்பட்டது. வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் யானையை நிமிர்த்தி, பின்னர் லாரியில் ஏற்றி முதுமலை புலிகள் காப்பகத்துக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே யானை தெப்பக்காடு கொண்டு செல்லும் வழியில் லாரியிலேயே உயிரிழந்தது.
இறந்த யானை மன்றடியார் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
யானையின் மீது சமூக விரோதிகள் சிலர் தீப்பந்தத்தை வீசியதாகவும், இதனால், காதின் ஒரு பகுதி சிதைந்து சுமாராக 40 லிட்டர் ரத்தம் யானையின் உடலில் இருந்து வெளியேறியிருக்கும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மசினக்குடி அருகே குடியிருப்பு பகுதி அருகே வந்த யானையின் மீது சில மர்மநபர்கள் எரியும் டயரை தூக்கி எரிந்துள்ளனர். தீயில் எரிந்து கொண்டே இருந்த டயர், கீழே விழாமல் யானையின் காதில் சிக்கியுள்ளது. இதனால், வலியை தாங்க முடியாமல் அலறிக் கொண்டே வனப்பகுதிக்குள் ஓடியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த ஒருவரால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கொடூர செயலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
0
0