வங்கிகளை குறிவைத்து ஆட்டைய போடும் ஸ்பிரே கொள்ளையர்கள் : மடக்கி பிடித்த போலீசார்… பின்னணியில் பகீர்!!!
Author: Babu Lakshmanan2 October 2021, 8:09 pm
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடித்த ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஸ்பிரே கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் கடந்த 15ஆம் தேதி ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து திருடும் போது, போலீசாரை கண்டதும் சொகுசு ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை விட்டுவிட்டு கொள்ளை கும்பல் தப்பி ஓடியது. அதற்கு அடுத்த நாளே ராணிப்பேட்டை மாவட்டம் பெருங்களத்தூர் பகுதியில் ஆக்சிஸ் வங்கியின் ஏடிஎம்மில் 4 லட்ச ரூபாய் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடித்து சென்றனர்.
இரண்டு ஏடிஎம் இயந்திர கொள்ளை சம்பவங்களில் கண்காணிப்பு கேமராவில் ஒரே முகம் பதிவாகியிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கும்முடிபூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலைக்கு லாரியில் பொருட்களை இறக்கி விட்டு, ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடித்து தங்கள் கைவரிசையை காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, எளாவூர் சோதனைச் சாவடி வழியாக லாரியில் சென்றபோது, ராணிபேட்டையிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராவிலும் லாரி பதிவாகி இருந்ததால், லாரியை மடக்கி சோதனை நடத்தினர். இதில், இருந்த கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஷாத், ஷாஜித், எமன்தன், சிறுவன் ஷோகில் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பணம், இரண்டு செல்போன், வெல்டிங் செய்ய பயன்படுத்திய சிலிண்டர் பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.
கொள்ளையர்கள் கொள்ளையடித்த 4 லட்ச ரூபாய் பணத்தை ஹரியானாவில் உள்ள உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதனை மீட்க ஆரம்பாக்கம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் தொழிற்சாலைக்கு லோடு இறக்குவதற்கு வருவதைப் போன்று வந்து, ஆந்திர மாநிலத்தில் காரை திருடி கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே தெளித்து, எளாவூர் மற்றும் ராணிப்பேட்டையில் நூதனமாக கொள்ளையில் ஈடுபட்டவர்களை மடக்கி பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.
0
0