கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த வக்கீல்கள் : திகைத்து நின்ற அதிகாரிகள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 9:22 pm
Cbe Collector - Updatenews360
Quick Share

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை நீதிமன்ற உத்தரவில் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு.

கடந்த 2011″ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சத்தியமூர்த்தி மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் வால்பாறை சென்றபோது சோலையார் அணை அருகே வனத்துறை வாகனம் மோதியது.

இந்த விபத்தில் சத்தியமூர்த்தி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முரளி கிருஸ்னன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்தார்.

இந்த விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்க கோரி சத்தியமூர்த்தி மனைவி சுகந்தி மற்றும் முரளி கிருஷ்ணன் ஆகியோர் சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 2018ம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பில் சத்தியமூர்த்தி குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சத்து 40 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் ஒரு மாத காலத்திற்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேபோல் முரளி கிருஷ்ணனுக்கு ரூ. 20 லட்சத்து 11 ஆயிரத்தை 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என சேலம் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து அரசு தரப்பில் இருந்து 50 சதவீத இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

பின்னர் மீதமுள்ள தொகையை வழங்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாவட்ட 4-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு 2020ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்காததால் வட்டியுடன் சேர்த்து ரூ 34 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அமீனா மருதையன், சேலம் நீதிமன்றத்தின் அமீனா சண்முகம் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.

தொடர்ந்து பொருட்களை ஜப்தி செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் தரப்பினர் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.

இதனால் தற்காலிகமாக நீதிமன்ற பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஜப்தி செய்யாமல் சென்றுள்ளனர்.

Views: - 355

0

0