ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் : ராகுல் காந்தி விமர்சனம்!!!

1 March 2021, 12:58 pm
Rahul Campaign -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக விளங்குகிறது நான் தமிழர் கலாச்சாரத்தையும் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளேன் இவ்வாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அகில இந்திய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த இரண்டு தினங்களாக தூத்துக்குடி, நெல்லை, மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதை தொடர்ந்து தென்காசியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை 9.58 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்தார்.

அவருக்கு கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக அரசு விருந்தினர் மாளிகை முன்புள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசியதாவது : இன்று நமது தலைவர் மறைந்த முன்னாள் எம்பி வசந்தகுமாரை நினைவு கூறுகிறோம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும், ஆளும் அரசாங்கம் அவரை மிரட்டினாலும் அதற்கு அல்லாமல் அவர் அஞ்சாமல், சோர்ந்து போகாமல் அவர் காங்கிரஸ் கட்சியின் பின்னால் உறுதியாக இருந்தார். அதற்காக அவரை நினைவு கூர்வோம்.

அவர் எப்போதுமே பின்தங்கிய மக்களுக்காக, விளிம்புநிலை மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார் என்பதை நினைவுபடுத்துகிறேன். அவர் ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்துள்ளார் ஒரு குடும்பத்திற்கு திருமணம் செய்வதற்காக 10 ஆயிரம் வீதம் 1000 குடும்பங்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

கரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். இவரை போன்ற சக்தி வாய்ந்த திறமைமிக்க ஒரு தலைவரை இழந்துள்ளோம்.

மத்தியில் உள்ள அரசாங்கம் தமிழ் மக்களையும், தமிழ் கலாசாரத்தையும், தமிழர் நாகரிகத்திற்கும் மதிப்பு கொடுப்பதாக இல்லை. மத்திய அரசாங்கம் சொல்லும் அனைத்து செயல்களையும் அப்படியே தமிழக முதல்வர் அமல்படுத்துகிறார். மத்திய அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை தமிழக முதல்வர் அப்படியே நிறைவேற்றுகிறார்.

பிரதம மந்திரி தன்னைத்தானே தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் மனநிலையில் உள்ளார். தமிழகத்தையும் ஒரு தொலைக்காட்சியாக தான் பார்க்கிறார். தொலைக்காட்சியில் எப்படி சேனல்களை மாற்றலாமோ அதேபோல் அவர் எல்லாவற்றையும் மாற்றலாம் என கருதுகிறார்.

தமிழகத்தை தமிழர் தவிர வேறு யாரும் ஆட்சி செய்யவும் தமிழர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த தேர்தலிலும் அதே தான் பின்பற்ற வேண்டும். தமிழக மக்களை உண்மையாக முன்னிலை படுத்துகிற உண்மையான தமிழனாக செயல்படுகிறவர்தான் உண்மையான தமிழக முதலமைச்சராக வரவேண்டும்.

தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருந்து வருகிறது. காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார் என்பதை அறிந்து கொண்டேன். அந்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்த பொருளாதார மேதைகள் இது ஒரு மோசமான பொருளாதார சீரழிவு திட்டம் என தெரிவித்தார். ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்களை கண்டுகொள்ளாமல் ஏழை மக்களின் நிலையை அறிந்து திட்டத்தை செயல்படுத்தினார்.

ஆனால் தற்போது தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பெருமை காமராஜரையே சேரும். எனவே தான் தமிழகம் தான் இந்தியாவின் வழிகாட்டி என கூறுகிறேன்.

தொழில் வளர்ச்சியிலும் தமிழகம் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் உள்ளன. இதில் ஏராளமானோர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். தமிழகத்தில் உள்ள விவசாயிகள் இந்தியாவில் உள்ள வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் நுழைய வழி விட்டுக் கொடுக்க கூடாது. பிரதமர் கூறுகிறார் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு என்று. அப்படி என்றால் தமிழர்கள் இந்திய மொழி இல்லையா, தமிழ் கலாச்சாரம் இந்திய கலாச்சாரம் இல்லையா இது இந்த தேர்தலில் பிரதிபலிக்க வேண்டும்.

ஒரு இந்திய குடிமகனாக தமிழ் கலாச்சாரத்தையும் மொழி உணர்வையும் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழ் மொழியை மட்டுமல்ல இந்திய நாட்டிலுள்ள பிற மொழிகளையும் பிற கலாச்சாரங்களையும் காப்பாற்ற நான் கடமைப்பட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 16

0

0