கடலில் வீசிய திடீர் சூறைக்காற்று: விசைப்படகில் சென்ற மீனவர் மாயம்…கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு..!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 6:28 pm
Quick Share

கன்னியாகுமரி: கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு சூரைக்காற்றில் சிக்கி மீனவர் மாயம் – கடலில் தத்தளித்த 11-மீனவர்கள் பத்திரமாக கரை சேர்ந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான பரலோக மாதா என்ற விசைப்படகில் கேரள மாநிலம் கொல்லம் கடல் பகுதியிலிருந்து கடந்த 15- 9 – 2021 அன்று குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்பது மீனவர்களும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த மூன்று நபர்களும் என 12 பேர் மீன் பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு ஆழ்கடல் பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மீன்பிடித்து விட்டு கரை திரும்பிக் கொண்டிருக்கும்போது நேற்றிரவு கூடன்குளம் கடல் பகுதியில் 11-கடல் மைல் தொலைவில் வந்து கொண்டிருந்த போது திடீரென்று வீசிய சூறைக்காற்றில் படகின் கீழ்ப்பகுதி சேதமடைந்து கடல் நீர் உட்புக தொடங்கிய நிலையில் மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் சேதமடைந்த படகிலிருந்து கடலில் தத்தளித்த மீனவர்கள் ஒவ்வொருவரையும் தங்கள் படகில் பாதுகாப்பாக மீட்ட நிலையில் குளச்சல் வாணியகுடி பகுதியை சேர்ந்த ஜான் என்ற மீனவர் மட்டும் எதிர்பாராதவிதமாக கடலில் மாயமானார்.

சேதமடைந்த படகும் முழுதுமாக நீரில் மூழ்கியதை தொடர்ந்து தற்போது பாதுகாப்பாக படகில் ஏறிய 11 மீனவர்களும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர் கரை திரும்பிய 11-மீனவர்களிடமும் குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாயமான மீனவர் ஜானை கண்டுபிடித்து தருமாறு கடலோர காவல் படைக்கும் மத்திய மாநில அரசுக்கும் மீனவரின் குடும்பத்தினர் மற்றும் தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது

Views: - 350

0

0