ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!!

5 November 2020, 6:44 pm
Cbe CM - Updatenews360
Quick Share

கோவை : ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை நடத்துபவர்களை குற்றவாளிகளாக கருதி கைது செய்யப்படுவர் என முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊட்டியில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தும் பொருட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி, திருப்பூரில் கொரோனா தொற்று தடுப்பு பணி குறித்தும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக வந்துள்ளதாக கூறினார்.

கோவையில் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. கோவை மாநகர மக்கள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை அரசு நிறைவேற்றியுள்ளது. காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பாலம் 3 கிமீ தொலைவுக்கு ரூ.214 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது.

உக்கடம் மேம்பாலம் ரூ.120 கோடி மதிப்பில் 2 கிமீ பணிகள் நடைபெறுகிறது. சுங்கம் சந்திப்பில் ரூ.253 கோடி மதிப்பில் 3 கி.மீ தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில் ரூ.66 கோடி 1 கி.மீ நீளத்திற்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கவுண்டர்மில்ஸ் சந்திப்பில் ரூ.42 கோடி மதிப்பில் 670 மீட்டருக்கு மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. கண்ண்ணப்ப நகர் ரயில்வே மேம்பாலம் ரூ.16 கோடி மதிப்பில் நடைபெறுகிறது.

கணபதி-ஆவாரம்பாளையம் சாலையில் 580 மீட்டர் நீளத்திற்கு ரூ.55 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அவினாசி சாலை உயர் மட்ட மேம்பாலமானது 9 கி.மீ நீளத்திற்கு ரூ.1100 கோடி மதிப்பில் விரைவில் பணி துவங்கும். சித்ரா-குரும்பம்பாளையம் சாலை அகலப்படுத்த நில அளவை பணி நடக்கிறது.

காந்திபுரம் உயர்மட்ட பாலத்தில் இருந்து 100 அடி சாலைக்கும், பாரதியார் சாலையிலும் இறங்கும் வகையில் இரண்டு இறங்கு தளம் அமைக்கும் பணி ரூ.25 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. உக்கடம் -ஆத்துப்பாலம் மேம்பாலம் கரும்புக்கடை வரை நீட்டிப்பு செய்ய ரூ.265 கோடி மதிப்பில் ஒப்பந்த புள்ளி பெறப்பட்டுள்ளது.

விரைவில் பணிகள் துவங்கும் என்ற அவர், லாலி ரோடு சந்திப்பில் ரூ.50 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் துவங்கும். துடியலூர்-கோவில்பாளையம் சாலை ரயில்வே மேம்பாலம் ரூ.25 கோடி விரைவில் செயல்படுத்தப்படும். கோவை மேற்கு வட்ட சாலை சுமார் 35 நீளத்திற்கு, ரூ.320 கோடி மதிப்பில் நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய பல தரப்பில் இருந்து கோரிக்கை வருகிறது. இந்த இணையவழி சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்கின்றனர். அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு இதனை தடை செய்ய நடவடிக்கை எடுக்கிறது. மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வழக்கில் இதுகுறித்து பரிசீலிக்கிறோம் என்று ஏற்கனவே நீதிமன்றத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் இதை தடை செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அசுர வேகத்தில் இணையம் பயன்பாடு உள்ள சூழலில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுக்கள் வாழ்க்கையை சீர்குலைய செய்யும். பொதுமக்கள் நன்மை கருதி இவ்வாறு பணம் வைத்து நடத்தப்படும் அனைத்து ஆன்லைன் சூதாட்டமும் தடை செய்ய இந்த அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவரை குற்றவாளிகளாக கருதி கைது செய்ய சட்ட திருத்தத்தை துரிதமாக அரசு மேற்கொள்ளும்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அந்தவகையில் நடிகர் விஜய் கட்சி தொடங்க உரிமை உள்ளது. அது அவருடைய உரிமை.

7 பேர் விடுதலையை ஸ்டாலின் அடிக்கடி கூறுகிறார். அக்கறை இருந்தால் கடந்த 2007ம் ஆண்டு அன்றைய முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவை முடிவை மேற்கொள்கிறார். அப்போது 7 பேர் விடுதலை குறித்து கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கை அடிப்படையில் அமைச்சரவை கூடி நடைபெற்றது. அப்போது நளினியை தவிர்த்து மற்றவர்கள் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக ஏகமனதாக முடிவு செய்தார்கள்.

ஏற்கனவே நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறை படுத்தலாம் என்றார். அன்றைய தினம் இவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று திமுக முடிவு செய்தது. இன்று அவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார். ஜெ. அரசு அதனை நடைமுறைபடுத்த தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பியுள்ளோம். 7 பேர் விடுதலைக்கு குரல் கொடுத்த அரசு அதிமுக அரசு.

மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் என்று பள்ளி கல்லூரிகளை திறக்க நிர்வாகத்தினரும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்தனர். கொரோனா குறைந்த சூழலில் தான் முடிவை அறிவித்தோம். இப்போது, பள்ளிகள் திறந்தால் கொரோனா பாதிக்கும் எங்கின்றனர். இதனையும் அரசு கருத்தில் எடுத்துக்கொண்டு கருத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 24

0

0