உதகை பூங்காக்கள் திறப்பு : சுற்றுலா பயணிகளுக்கு மலைகளின் ராணி வரவேற்பு!!

9 September 2020, 11:16 am
Ooty Park Open - updatenews360
Quick Share

நீலகிரி : கொரோனா எதிரொலியாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டிருந்த உதகை அரசு தாவரவியல் பூங்கா இன்று திறக்கப்பட்டது.

கடந்த மார்ச் 24 முதல் குருவான அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கீழுள்ள பூங்காக்கள் அனைத்தும் இன்று திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியிருந்தது. இதில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா என அனைத்தும் கடந்த ஆறு மாதத்திற்கு பிறகு இன்று திறக்கப்பட்டன.

உதகை அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயில் பகுதியில் கொரோனா நோய் தடுப்பு விளம்பர பலகை வைக்கப்பட்டு பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிருமி நாசினிகள் கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்பு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு தோட்டக்கலை துறை சார்பில் மலர் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது ” உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்கள் உள்ளே நுழைய ஒரு வழியும் ,வெளியேறுவதற்கு இன்னொரு வழியும் தனித்தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது. பூங்காவினுள் நுழைபவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது முக்கியமானதாகும் ” என்றார்.

மேலும் அவர் கூறுகையில்”பூங்கா நுழைவாயிலில் ஒவ்வொரு பார்வையாளரின் உடல் வெப்ப நிலை சோதனை செய்யப்படும். சேனடைசர் வழங்கப்படுகிறது. பூங்கா ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை வழங்கப்பட்டுள்ளது . சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து , சமூக இடைவெளி கடைப்பிடித்து சமூக ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து பூங்காவை பார்வையிடலாம் “என்றார்.

இம்மாதம் இரண்டாம் சீசன் துவங்கியுள்ள நிலையில் அரசு தாவரவியல் பூங்காவில் 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்துக்குலுங்கும் மலர்கள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த ஆறு மாதங்களாக வாழ்வாதாரத்தை இழந்து வந்த பூங்கா மற்றும் அதை சுற்றியுள்ள சிறுகுறு சாலையோர வியாபாரிகள் பூங்கா திறக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Views: - 0

0

0