திமுக பிரமுகர் வீட்டிற்கு நேரில் சென்ற ஓபிஎஸ்… கரை வேட்டி கட்சிகள் ஒன்று திரண்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2023, 3:43 pm

திமுக பிரமுகர் வீட்டிற்கு நேரில் சென்ற ஓபிஎஸ்… கரை வேட்டி கட்சிகள் ஒன்று திரண்டதால் பரபரப்பு!!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வனின் மகள் சாந்தினி திருமண விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்றது.

முதலில் இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பதாக இருந்து பின்னர் அன்றைய நாள் திமுக நீட் போராட்டம் மற்றும் பிற நிகழ்ச்சிகளால் முதலமைச்சர் செல்வது தவிர்க்கப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பத்தில் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த திருமண விழா நடைபெற்றது. அதற்கு 2 நாட்கள் முன்பாக மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், இந்த திருமண விழாவில் பங்கேற்கவில்லை. அதே நாளில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற்றதால் தேவையற்ற சட்டம் ஒழுங்கு குழப்பங்கள் ஏற்படும் என உளவுத்துறை எச்சரித்ததால் இந்த நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் தவிர்த்ததாக கூறப்பட்டது.

அதேபோல, தங்க தமிழ்ச்செல்வன் இல்லத் திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்கவில்லை. திருமண நாளன்று வெளியூரில் இருந்ததால் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், சொந்த மாவட்டமான தேனிக்கு வருகை புரிந்த ஓ.பன்னீர்செல்வம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள தங்க தமிழ்செல்வன் இல்லத்திற்கு நேரில் சென்று மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்து தெரிவித்தார்.

வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார் தங்க தமிழ்ச்செல்வன். மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்தும், குங்குமம் அணிவித்தும் வாழ்த்தினார் ஓபிஎஸ். பின்னர் ஓபிஎஸ் – தங்கதமிழ்ச்செல்வன் இருவரும் சில நிமிடங்கள் உரையாடினர்.

அப்போது, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர். தங்க தமிழ்ச்செல்வன் இல்ல நிகழ்வில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இரு கட்சி கரைவேட்டிகளும் தென்பட்டன. ஓபிஎஸ்ஸுக்கு நீண்டகாலமாக நெருக்கமானவராக அறியப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் தற்போது எதிர் கட்சியில் இருக்கும் சூழலில் இரு கட்சியினரும் அவரது வீட்டில் கூடியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!