நாளைக்கு ஆரஞ்சு அலர்ட் : கோவையில் முன்னதாகவே வெளுத்து வாங்கும் கனமழை!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2021, 2:21 pm
கோவை : கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம் உட்பட 10 மாவட்டங்களுக்கு 21ம் தேதி கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த சூழலில், ஒருநாள் முன்னதாகவே கோவையில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில், 21ம் தேதி ஆறு மாவட்டங்களுக்கும், 22ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதில் 21ம் தேதி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் என்றும், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கோவையில் ஒரு நாள் முன்னதாகவே கன மழை வெளுத்து வாங்கத் தொடங்கி இருக்கிறது. கோவை மாநகரை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், டவுன்ஹால், பீளமேடு, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் சாலை எங்கும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடி வருகிறது. சாலையெங்கும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
0
0