பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் அவமதித்த விவகாரம் : திமுக நிர்வாகி தலைமறைவு!!

Author: Udayachandran
11 October 2020, 10:37 am
DMK Executive Escape- Updatenews360
Quick Share

கடலூர் : பட்டியலின ஊராட்சி மன்ற தலைவரை அவமதித்த விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் தலைமறைவாகியுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்குதிட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர். மோகன் என்பவர் ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக உள்ளார்.

ஊராட்சி மன்றத் தலைவராக உள்ள ராஜேஸ்வரி பட்டியலினத்தவர் என்பதால் கடந்த ஜுலை 17ம் தேதி நடந்த ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தரையில் உட்கார வைத்து அவமதிப்பு செய்துள்ளனர். இப்படி ஒவ்வொரு கூட்டத்திலும் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து புவனகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்மைதான் என தெரியவந்தது. இதையடுத்து துணைத் தலைவர் மோகன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

மோகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தினர். அதே போல இந்த கூட்டம் நடைபெற்ற போது, பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர் அவமதிக்கப்பட்டது குறித்து புகார் அளிக்காத ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கடலூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தில் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி தவிர ஊராட்சி துணை தலைவர், கவுன்சிலர்கள் அனைவரும் நாற்காலியில் அமர்ந்துள்ளனர். பதவியேற்ப்பு விழாவில் கூட தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் அனுசரித்து போனனேன், ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் கூட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொல்லை தாங்க முடியாமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாக ராஜேஸ்வரி வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஊராட்சி மன்ற செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரைணையை அடுத்து தெற்குதிட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Panchayat Secretary Arrest - Updatenews360

இது குறித்து ராஜேஸ்வரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், திமுக துணைத் தலைவர் மோகன் ஜாதி பெயரை கூறி தொடர்ந்து அவமதித்து வந்ததாகவும் இதேபோன்று, தெற்கு திட்டை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுகந்தி என்பவரும், தன்னை தரையில் அமரவைத்து அவமதிப்பு செய்தாக குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், துணைத் தலைவர் மோகன் தலைமறைவாகியுள்ளார்.

Views: - 59

0

0