பேருந்தில் பெண்ணுக்கு சாக்லேட் கொடுத்ததால் வந்த வம்பு ; பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் : கைது செய்யக்கோரி போராட்டம்!!

Author: Babu Lakshmanan
10 பிப்ரவரி 2023, 7:08 மணி
Quick Share

ஆலங்குடி அருகே பேருந்து பயணத்தில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பள்ளி மாணவர்கள் உட்பட மூன்று நபர்களைத் தாக்கியவர்களைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சி தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் நவீன்(16), விஷ்வா (16) ஆகியோர் தினமும் அரசு நகரப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாணவர்களின் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பிறந்தநாள் எனவும், இதனால் பேருந்தில் இருந்த அனைவருக்கும் சாக்லேட் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, பேருந்தில் இருந்த மாங்கோட்டை ஊராட்சி வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சாக்லேட் கொடுத்ததாகவும், இதனால் அதை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(21) என்பவர் இதை எதிர்த்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு தரப்பினருக்கும் வாக்குவதம் ஏற்பட்டு தள்ளு முள்ளு நடைபெற்றுள்ளது.

பிறகு அவரவர்கள் பணிக்கும், பள்ளிக்கும் சென்று விட, மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது, மாங்கோட்டை பகுதியில் பேருந்தை மறித்த மேலப்பட்டியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் மூவர் தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பள்ளி மாணவர்களான நவீன், விஷ்வா மற்றும் அவர்களது பகுதியைச் சேர்ந்த அஜூந்திரன்(22) உட்பட்ட மூவரும் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த தெற்குப்பட்டி பகுதியினைச் சேர்ந்தவர்கள் மூவரையும் ஆலங்குடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, மூவரையும் தாக்கிய ஆகாஷ் உள்ளிட்ட நான்கு நபர்களையும் கைது செய்யக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி-ஆதனக்கோட்டை சாலையில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தைக் கைவிட்டனர். இரண்டு தரப்பினரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் சாதிய மோதல் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் காயமடைந்த மூவரும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

  • Tamilisai Thirumavalavan தரம் தாழ்ந்த விமர்சனமா? தப்பாக இருந்தால் வருந்துகிறேன்.. திருமாவளவன் திடீர் பல்டி!
  • Views: - 458

    0

    0