இனிமேல் இப்படி எல்லாம் பேசக்கூடாது… சர்ச்சை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நிபந்தனை ஜாமீன்!!
Author: Babu Lakshmanan10 August 2021, 2:18 pm
கன்னியாகுமரி : அரசியல் தலைவர்களை அவதூறாகவும், மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசிய கிறிஸ்துவ பாதிரியாருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா என்பவர் பேசினார். அமைச்சர்கள் சேகர் பாபு, மனோ தங்கராஜ் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்ததுடன், திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்கு போட்ட பிச்சை என்றும் அவர் கூறினார்.
அதோடு, பாரத மாதாவை அவமதித்து பேசியதோடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி, மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவும் பேசினார். அவர் பேசிய இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு காவல்நிலையங்களில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, தலைமறைவான அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை ஜாமீனில் விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிமன்றம் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இனி அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசமாட்டேன் என பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், திருச்சி தில்லைநகர் காவல்நிலையத்தல் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.
0
0