அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீது தாக்குதல் ; நோயாளி மற்றும் உறவினர் கைது… 5 பிரிவுகளின் வழக்குப்பதிவு

Author: Babu Lakshmanan
5 March 2024, 12:04 pm
Quick Share

வேலூர் அரசு மருத்துவமனையில் முதுகலை பயிலும் மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய உள்நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

வேலூர் அடுத்த சாத்துமதுரை பகுதியை சேர்ந்தவர் சுபா (36). இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த மாதம் முதல் ஏழு நாட்களாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பெண்கள் சிகிச்சை வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று (04.03.2024) மாலை இவரை காண ஆண் உறவினர் ஒருவர் வந்துள்ளார். அப்போது, அங்கு வந்த முதுகலை மருத்துவம் பயிலும் மருத்துவர் விஷால் என்பவர் சுபாவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் அமர்ந்திருந்த ஆண் நபரை, இது பெண்களுக்கான வார்டு என்றும், இதிலிருந்து வெளியேறும்படியும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் மத்தியில் வாக்குவாதம் முற்றியுள்ளது.

இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதனை பார்த்த நோயாளி சுபா இருவரை தடுக்க முயன்ற போது, மருத்துவர் சுபாவை அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் அணிந்திருந்த கால் அணியால் மருத்துவரை தாக்கியுள்ளார். இது நோயாளிகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தாலுகா காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் மருத்துவரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட முதுகலை மருத்துவ மாணவர் விஷால் அளித்த புகாரின் அடிப்படையில் 2008 மருத்துவரை தாக்கும் சட்டம், பணி செய்ய விடாமல் தடுக்கும் சட்டம் தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் மருத்துவரை தாக்கிய பெண் நோயாளி சுபா மற்றும் அவரது உறவினர் திவாகர் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 137

0

0