‘சென்னையில் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம்’ : போக்குவரத்துத்துறை அறிவிப்பு..!

31 August 2020, 4:03 pm
Quick Share

சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. அன்லாக் 3.0 இன்றுடன் முடிவுக்கு வந்துள்ள நிலையில் செப்-1 ஆம் தேதி முதல் அன்லாக் 4.0 அமலுக்கு வரவுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகள் குறித்து நேற்று அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

அதில், தமிழகம் முழுவதும் இ.பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாவும், மாநிலத்திற்கு உள்ளே பொது போக்கு வரத்திற்கு அனுமதி வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தநிலையில், தமிழக போக்குவரத்துறை கழகம் அதற்கான ஆயத்த பணிகளில் முழு வீச்சாக ஈடுபட்டுள்ளது.

பேருந்துகள் பழுது பார்க்கப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நாளை முதல் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் நாளை முதல் பேருந்துகள் இயக்க உள்ளதால், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாநகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மாநகரப் பேருந்துகள் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே இயங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகளுக்கான பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. தினசரி பாஸ், மாதாந்திர பாஸ், விருப்பம் போல் பயணம் செய்யும் 1000 ரூபாய் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0