முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதியுறும் கைக்குழந்தை: உதவிக்கரம் நீட்ட பெற்றோர் கோரிக்கை மனு..!!

Author: Aarthi Sivakumar
1 November 2021, 3:47 pm
Quick Share

கோவை: முதுகு தண்டுவட சிதைவு நோயால் அவதிப்படும் 3 குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான நிதியை அரசு வழங்கி உதவி செய்ய வேண்டும் என்று கோரி குழந்தையின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த க.க.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ். எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரோமிலா. இந்த தம்பதியினருக்கு ஜேசன் என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோய் உள்ளது.

இதற்கான சிகிச்சைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான தடுப்பூசி செலுத்த வேண்டியிருந்தது. இந்த சூழலில், அமெரிக்க மருந்து நிறுவனம் குலுக்கல் முறையில் இந்த குழந்தைக்கு இலவசமாக அந்த தடுப்பூசியை செலுத்தியது. இந்த நிலையில், குழந்தையின் மூச்சுக்குழாயில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து, அறுவை சிகிச்சை செய்வதற்கான நிதியை கொடுத்து உதவுமாறு ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து குழந்தையின் தாய் ரோமிலா கூறுகையில், ” எங்கள் குழந்தைக்கு மூச்சு குழாயில் பிரச்சனை இருப்பதால் தொண்டை மற்றும் வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்காக மருத்துவ செலவு ரூ.9 லட்சம் வரை ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு உதவிட வேண்டும் என்று அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

எங்களது குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அரசு மற்றும் பொது மக்கள் எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். குழந்தைக்கு உதவ நினைப்பவர்கள் 7092558807 என்ற எண்ணிற்கு கூகுள் பே மூலமாகவும் நிதி வழங்கலாம்” என கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 455

0

0