கோவையில் சாதிப்பெயரை கூறி அரசு ஊழியரை காலில் விழ வைத்த மனுதாரர் : வைரலாகும் அதிர்ச்சி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2021, 10:54 am
Cbe Sry - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அரசு ஊழியரை மனுதாரர் மிரட்டி காலில் விழ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் ஒற்றர் பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவர் பணிபுரிந்து வருகிறார். மேலும் அதே அலுவலகத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் தண்டல்காரர் ஆக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் தனது சொத்து விபரங்களை சரிபார்ப்பு விஷயங்களுக்காக விஏஓ அலுவலகத்துக்கு வந்துள்ளார். அப்போது விஏஓ கலைச்செல்வி, சரியான ஆவணங்கள் இல்லை என்றும் முறையான ஆவணங்களை கொண்டு வாருங்கள் என்று கோபிநாத்திடம் கூறியிருக்கிறார்.

அப்போது கோபிநாத், கலைச்செல்வி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தண்டல்காரர் முத்துசாமி குறுக்கிட்டு அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப் படுத்த முயற்சி செய்திருக்கிறார்.

இதையடுத்து கோபிநாத் முத்துசாமியின் சாதிப் பெயரை கூறி திட்டியதோடு புகார் அளித்து பணியிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.இதையடுத்து தண்டல்காரர் முத்துசாமி ,கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதுள்ளார்.

இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். வி.ஏ.ஒ முன்பு ஊழியர் ஒருவர் மனுதாரர் காலில் விழுந்து கதறும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Views: - 567

0

0