நிரம்பும் நிலையில் பில்லூர்… பவானி அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு : கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2023, 10:36 am
Pillur Dam - Updatenews360
Quick Share

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 7413 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மன்னனான பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2,47,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்து காணப்பட்டு அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்த நிலையில் தற்போது நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று மாலை முதல் அதிகரித்து வருகின்றது.

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் மூலம் பயனடையும் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று காலை ஆறு மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 80.47 அடியாகவும், நீர் இருப்பு 15.93 டி.எம்.சி ஆகவும், அணைக்கு வரும் நீர்வரத்து 7413 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை வாய்க்காலில் 800 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்திற்கு 100 கன அடி நீரும், குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 200 கன அடி நீர் என மொத்தம் 1105 கன அடி நீர் என தற்போது வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதே போல பில்லூர் அணை நேற்று 84அடியாக இருந்த நீர் கொள்ளளவு, இன்று 94அடியாக உயர்ந்துள்ளது . இதனால் அணை நிரம்பி பவானி சாகர் அணைக்கு நீர் திறந்துவிடபடுகிறது .

இதனால், பவானிசாகர் அணையினை ஒட்டியுள்ள மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதி உள்ளிட்ட கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணைக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 339

0

0