பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : மதிப்பெண்கள் மீது அதிருப்தியடைந்த மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு

19 July 2021, 11:53 am
plus 2 result - updatenews360
Quick Share

சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

கொரோனா பரவல் காரணமாக தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மதிப்பெண் நிர்ணய குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், பிளஸ் 2 செய்முறை தேர்வில் 30 மதிப்பெண்; பிளஸ் 1 பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்ணில் 20 சதவீதம் மற்றும் 10ம் வகுப்பில் அதிகபட்சம் மதிப்பெண் பெற்ற, மூன்று பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50 சதவீதம் சேர்த்து பிளஸ் 2 மதிப்பெண்ணாக பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார்.

அவர் கூறியதாவது :- பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு முதல் முறையாக தசம எண் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. tnresults.nic.in; dge.tn.nic.in; dge1.tn.nic.in; dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரங்கள் SMS ஆக அனுப்பி வைக்கப்படும். 8 லட்சம் மாணவ, மாணவிகளுக்கான +2 ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது

+1 வகுப்பில் எந்த தேர்வும் எழுதாத சுமார் 1650 பேர் தேர்ச்சி பெறாதவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 எந்த மாணவரும் எடுக்கவில்லை. 551 முதல் 600 மதிப்பெண் வரை பெற்றவர்கள் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தை 100 சதவீதம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில் ஆல்பாஸ் என்றே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும், என தெரிவித்துள்ளார்.

Views: - 159

0

0